ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த லேண்ட்க்ரூஸர் வகை வாகனத்துடன் விமானப்படை கோப்ரல் உட்பட இருவரை வெடிபொருட்களுடன் திங்கட்கிழமை (17) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெல்லாவெளி பாலையடிவட்டை வீதியில் திங்கட்கிழமை (17) அதிகாலை 3. மணியளவில் பயணித்த லேண்ட்க்ரூஸர் வாகனத்தை காவல்துறையினர் சந்தேகத்தில் நிறுத்தியுள்ளனர். எனினும், அந்த வாகனத்தில் இருந்தவர்கள் அம்பாறை விமானப்படைக்கு செல்வதாக தெரிவித்த போது வாகனத்தை காவல்துறையினர் சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.
அதன்போது வாகனத்தில் இருந்து ஒரு கிலோ கிராம் அமோனியா, ஜெல்கூர், வெடிக்கான கயிறு, ஒரு பந்தம், 3 போத்தல் இரசாயனம் என்பவற்றை மீட்டுள்ளனர்.
கொடகவெல அரகம்பாவிலை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் ட்ரோன் கேமரா இயக்குநரான விமானப்படை கோப்பிரல் ஹனிந்து போப்பிந்த சமரவீர, களனி கொல்கம்புறவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிலால் சுஜீவ ஆகிய இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அத்துடன் லேண்ட் க்ரூஸர் வாகனத்தை மீட்டுக் காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் புதையல் தோண்டும் நோக்கத்துடன் இந்த பகுதிக்கு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த வெல்லாவெளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.