மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து வர, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை வரை 13 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் மூவாயிரத்து 920 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 399 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை நான்கு மாணவர்களும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 11 மாணவர்களும், தமிழில் முதுமாணிப்பட்டத்தை 22 மாணவர்களும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப்பட்டத்தை மூன்று மாணவர்களும், கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 38 மாணவர்களும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை ஒரு மாணவரும், கல்வியியலில் முதுமாணிப்பட்டத்தை 176 மாணவர்களும், பொது நிர்வாகத்தில் முதுமாணிப்பட்டத்தை 70 மாணவர்களும், கல்வியில் பட்டப்பின் தகமைச் சான்றிதழை 54 மாணவர்களும், பிராந்தியத் திட்டமிடலில் முதுமாணிப்பட்டத்தை 17 மாணவர்களும், தமிழில் பட்டப்பின் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறவிருப்பதுடன் வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும் பெறுகின்றனர்.
மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 177
மாணவர்கள் பொறியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 110 மாணவர்கள் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 84 மாணவர்கள் பொறியியலில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 91 மாணவர்கள் உயிர்முறைமைகளில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், சித்தமருத்துவ பீடத்தில் இருந்து 60 மாணவர்கள் சித்த மருத்துவ சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.
இவர்களுடன், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் இருந்து மருந்தகவியல் சிறப்புமாணிப் பட்டத்தை 39 மாணவர்களும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 52 மாணவர்களும், தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 38 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.
அத்துடன், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 267 மாணவர்களும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 13 மாணவர்களும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 83 மாணவர்களும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை மூன்று மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.
இவர்களுடன், கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 276 மாணவர்களும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 353 மாணவர்களும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 22 மாணவர்களும், சட்டமாணியில் சிறப்புப் பட்டத்தை 69 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.
மேலும், சேர். பொன் இராமநாதன் ஆற்றுகைகள், காண்பியக் கலைகள் பீடத்தைச் சேர்ந்த 158 மாணவர்கள் நடனம், இசை மற்றும் சித்திரமும் வடிவமைப்பும் துறைகளில் நுண்கலைமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 30 மாணவர்கள் கணனி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 57 மாணவர்கள் சுற்றுச் சூழல் விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தை 106 மாணவர்களும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணி பட்டத்தை 56 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.
வியாபாரக் கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 57 மாணவர்கள் கணக்கியலும், நிதியியலிலும் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 13 மாணவர்கள் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 32 மாணவர்கள் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 12 மாணவர்கள் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 34 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணி (பொது)ப் பட்டத்தையும், 67 மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், ஒன்பது மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.
இவர்களுடன், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 110 மாணவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெறுகின்றனர்.
பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 514 மாணவர்கள் கலைமாணி பட்டத்தையும், 76 மாணவர்கள் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும், 26 மாணவர்கள் வணிகமாணிப்பட்டத்தையும், 86 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளதுடன், 90 மாணவர்கள் உடற்கல்வியில் உயர் தகமைச் சான்றிதழ்களையும், 37 மாணவர்கள் தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் உயர் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும், வியாபார முகாமைத்துவத்தில் மூன்று மாணவர்கள் உயர் தகமைச் சான்றிதழ்களையும், வணிகத்தில் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெற இருப்பதுடன், வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 68 தங்கப் பதக்கங்களும், 57 பரிசில்களும், நான்கு புலமைப்பரிசில்களும், வழங்கப்படவுள்ளன.







