யாழ் பல்கலைக்கழக சமூகம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (15) மதியம் மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் இடம்பெற்றது. எம்மவர்களின் வலி நிறைந்த வரலாற்றை அடுத்த சந்ததியினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் கடத்தும் கடமை பல்கலைக்கழக மாணவர்களாகிய தமது பொறுப்பு என அவர்கள் தெரிவித்து குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மே-12 ஆம் திகதி தொடக்கம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை யாழ் பல்கலைக்கழக சமூகம் முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை நேரடியாக சென்று காய்ச்சி மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையிலே இன்றைய தினம் வியாழக்கிழமை 4வது நாளாக மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கப்பட்டதாக மன்னாரிற்கு வருகை தந்த யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் தெரிவித்தனர்.