Home இலங்கைகாணி சுவீகரிப்பு – தமிழர் தேசத்தின் மற்றொரு கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை

காணி சுவீகரிப்பு – தமிழர் தேசத்தின் மற்றொரு கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை

by admin

 

வடக்கிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்குப் பிரேரணையொன்றை அனுப்பிவைத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை அரசு கையகப்படுத்துதல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள அப்பிரேரணையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 28.03.2025 திகதி இடப்பட்ட, 2430/2025 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள 5000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட காணிகள் தொடர்பில் 7 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்புகளின் மூலம் கடற்கரைகள், ஏரிகள், வண்டிப் பாதைகள் மற்றும் மயானங்கள் என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்களால் பூர்வீகமாக பயன்படுத்தப்பட்ட பொதுச்சொத்துக்களைக் கொண்ட நிலங்களை அரசு கையகப்படுத்த முயற்சிக்கின்றது.

இலங்கை அரசு நிலத்தை அந்நியப்படுத்தியமைக்குப்  பதிலளிக்கும் விதமாகமே, சுயநிர்ணய உரிமைக்கான தமிழர் போராட்டமும் உருவானது. இதன்மூலம் இலங்கை அரசு தமிழர்களை தங்கள் சொந்த தாயகத்தில் சிறுபான்மையினராக மாற்றுவதற்கு தொடர்ந்தும் முயற்சிக்கிறது.

வடக்கு, கிழக்கில் உள்ள நிலத்தின்மீது தங்கள் தன்னாட்சி கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வர்த்தமானி அறிவித்தல் இலங்கை அரசாங்கங்களினால் தமிழர்களின் தாயகம் பறிக்கப்படும் நீண்ட வரலாற்றின் மற்றொரு முயற்சியாக அமைந்திருக்கின்றது.

அத்தோடு வர்த்தமானி அறிவித்தலில் உள்வாங்கப்பட்டுள்ள நிலங்கள் தமிழ் மக்களால் பூர்வீகமாக பயன்படுத்தப்பட்ட நிலங்களையும்  பொதுச் சொத்துக்களையும் உள்ளடக்கியது என்பது என்பது எமது புரிதலாகும்.

சுனாமி அனர்த்தத்தின்போதும், தொடர் இடப்பெயர்வுகளாலும் ஆவணங்கள் இழக்கப்பட்டுள்ள நிலையில், காணி உரிமையாளர்கள் தமது உரித்தை உறுதிப்படுத்துவதில் சிரமங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள்.

தற்போதைய அரசாங்கம் கடந்த ஜனாதிபதித்தேர்தலின்போதும், பொதுத்தேர்தலின்போதும், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு மூலமான தீர்வு குறித்து ஆராய்வதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வில் நிலத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு தீர்வை வழங்குவதும் உள்ளடங்கும்.

இருப்பினும், அரசின் இந்த வர்த்தமானி அறிவித்தல் அரசு நிலத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முந்தைய அரசாங்கங்களின் கருத்துக்களிலிருந்து வேறுபட்டதல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை தமிழர் தேசத்தின் மற்றொரு கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலைச்செயலாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.  ஆகவே இவ்வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக மீளப்பெறவேண்டும் என அப்பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More