Home இலங்கைமுதலீட்டாளர்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள்

முதலீட்டாளர்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள்

by admin
முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை அலையவிட்டிருக்கின்றார். என  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வேலணை பிரதேசசபையின் ஏற்பாட்டில் ‘உள்ளூராட்சி விழா – 2024’ சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வேலணை மத்திய கல்லூரியின் துரைச்சாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மக்களுடன் உள்ளூராட்சி மன்றங்கள் மிக நெருக்கமாகப் பணியாற்றத்தான் வேண்டும். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு பல சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன. அவை வினைத்திறனாக மக்களுக்கு கிடைக்கவேண்டுமென்றால் சிறந்த தலைமைத்துவம் இருக்கவேண்டும்.

சில இடங்களில் தீராத பிரச்சினைகள் கூட சிறப்பான தலைமைத்துவம் கிடைக்கப்பெற்ற பின்னர் தீர்ந்துவிடும். ஆனால் சில இடங்களில் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட தலைமைத்துவம் ஒழுங்காக அமையாவிட்டால் இழுபடும்.

முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை அலையவிட்டிருக்கின்றார்.

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்களை எதிர்காலத்தில் அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் தங்களின் வருமானத்தில் 20 சதவீதம் வரையில் தமது சபையின் ஊழியர்களின் சம்பளத்துக்காக செலவு செய்யவேண்டியுள்ளன. எஞ்சிய நிதியிலேயே அபிவிருத்தி வேலைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டியதாகவுள்ளது.

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக இருந்தாலும் எங்களின் சில செயலாளர்களின் வேலைகளையும் நான் பார்க்கவேண்டியிருக்கின்றது. சில செயலாளர்கள் மக்களைச் சந்திப்பதேயில்லை. தங்களைச் சந்திப்பவர்களுடன் எரிந்து விழுகின்றார்கள். இதனால் மக்கள் அவர்களைச் சந்திப்பதைவிட என்னைச் சந்திக்கலாம் என்று வருகின்றனர். மக்களுக்காகத்தான் பதவிகளில் இருக்கின்றோம் என்பதை அதிகாரிகள் பலர் மறந்துவிடுகின்றனர் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More