Home இலங்கைவடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையத்தை உடன் ஆரம்பிக்க பணிப்பு

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையத்தை உடன் ஆரம்பிக்க பணிப்பு

by admin
உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

யாழ். மாவட்டத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது அவசியம் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினரும் கோரிவருகின்றனர்.

கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் இதற்கான கட்டடம் எம்மால் அடையாளப்படுத்தப்பட்ட போதும் அது பொருத்தமானது அல்ல என அவர்கள் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். மாற்று இடத்தை உடனடியாக அடையாளப்படுத்தி வழங்கவேண்டியுள்ளது. தற்போது அதிகளவு சிறுவர்களும் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாவதால் உடனடியாக மறுவாழ்வு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

  இதன்போது அச்சுவேலியில் சிறுவர் சான்றுபெற்ற பாடசாலைக்கு அண்மையாகவுள்ள வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்துக்குச் சொந்தமான கட்டடத்தை புனரமைப்புச் செய்து பயன்படுத்த முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அது இயங்குநிலைக்கு வரும் வரையில் இந்த மாத இறுதிக்குள் உடனடியாக ஏதாவது ஓர் இடத்தை தற்காலிகமாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதன் போது, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மூடப்பட்ட பாடசாலைகள் சில உள்ளன என்றும் அந்தக் கட்டடங்களை பார்வையிட்ட பின்னர் அவற்றில் செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு இல்லத்துக்காக அமைக்கப்பட்ட கட்டடத்தை மறுவாழ்வு நிலையத்துக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
  இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், உளவள ஆலோசகர்கள், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் இணைப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் நேரடியாகவும், வடக்கின் ஏனைய மாவட்டங்களின் மாவட்;டச் செயலர்கள், பிரதேச செயலர்கள், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ஆகியோர் ‘சூம்’ செயலி ஊடாக இணைந்துகொண்டனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More