கடந்த காலங்களில் கிராம மட்டத்தில் விழிப்புணர்வுக் குழுக்கள் சிறப்பாகச் செயற்பட்டன. இப்போது அவை அருகிவரும் நிலையில் அவற்றை மீளவும் செயற்பாட்டு நிலைக்கு கொண்டு வரவேண்டியது அவசியம். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பாடசாலை மட்டத்தில் ஏற்படும் சிறுவர் உரிமை மீறல்களையும், முறைப்பாடுகளையும் கண்காணிப்பதற்கு முறைப்பாட்டுப்பெட்டி, கண்காணிப்பு கமரா என்பன சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. ஏனைய பாடசாலைகளிலும் இவை பொருத்தப்பட்டு முறைப்பாட்டுப் பெட்டியின் திறப்பு நன்னடத்தை உத்தியோகத்தர், சிறுவர் உரிமை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையிலேயே திறக்கப்பட வேண்டும்.
இரட்டை பிரஜாவுரிமையில் குழந்தை தத்தெடுப்பது தொடர்பான விடயங்களில் தேசிய நன்னடத்தை மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் கையாள்வதே பொருத்தமானதாக அமையும்.
சகல உத்தியோகத்தர்களும் கூட்டுப்பொறுப்புடனும் குழந்தைகளின் நலன்சார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்தும் செயற்படவேண்டும்.
சிறுவர் இல்லங்கள் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள சகல சிறுவர்களுக்கும் சிறுவர் சார்பான கடமை உத்தியோகத்தர்களின் விவரங்கள், தொலைபேசி இலக்கங்கள் என்பன தெரிவிக்கப்பட வேண்டும்.
சமூக கண்காணிப்பை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வுக் குழுக்கள் சமூக மட்டத்தில் உருவாக்கப்பட்டு நலன்சார் விடயங்கள் கவனிக்கப்படவேண்டும் எனவும், சகல விடயங்களையும் ஒருங்கிணைக்க பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என மேலும் தெரிவித்தார்.