ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வினைத் திறனற்ற வைத்தியசாலை நிர்வாகியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக அது பல்வேறு நிர்வாகச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றது. அத்துடன் வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பற்ற நிலைக்கும் தற்போதைய நிர்வாகம் இட்டுச் செல்கின்றது .
மேலும் இவ் வைத்தியசாலையில் புற்றுநோய்ப் பிரிவும் அங்கு சேவையாற்றும் சேவை நோக்கம் கொண்ட புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்தியும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் தொடர்ச்சியான நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
கால விரயம் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்ற காரணத்தால் வைத்திய நிர்வாகி தேவநேசனுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக உடனடியாக விசாரணைக் குழுவை நியமிப்பதுடன், புற்றுநோயாளர்களுக்குரிய தரமான இலவச சிகிச்சை அளிப்பதில் செயற்கையாக இடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நீக்குவதுடன், வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் இதர சுகாதார ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் சேவையாற்றுவதற்கும் ஏதுவான வகையில் நிர்வாக மாற்றத்தை வெகு விரைவில் ஏற்படுத்தாவிடத்து வைத்தியர்களினால் “எங்கள் வைத்திய சாலையை மீட்டெடுப்போம் – புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம் ” என்ற தொனிப் பொருளில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தத் தீர்மானம் எடுத்துள்ளோம்.
மக்கள் நலன்பால் அக்கறை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்பினர், சமூக செயற்பாட்டாளர்கள், வைத்தியசாலை மற்றும் நோயாளர் நலன் விரும்பிகள், பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
வைத்தியசாலைக்கு எதிரான சக்திகளிடமிருந்து உங்கள் வைத்தியசாலையைக் காத்திடக் கரம் கோர்த்திடுவோம் வாரீர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

