Home உலகம்ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் – இஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்1

ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் – இஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்1

எதிர்வினை என்ன?

by admin

ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருந்தது. இந்த தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை ஈரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 96 கிலோமீற்றர் தொலைவில் ஒரு மலைப் பகுதியில் ஃபோர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் தளம் அமைந்துள்ளது.

நிலத்தடி வசதி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மைய விலக்கு இயந்திரங்களையும், சிறிய சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் கொண்டிருந்த 2 முக்கிய சுரங்கப்பாதைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

இந்த தளத்தை தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கனவே முறையிட்டது. ஏனெனில், நிலத்தடியில் இருந்த அந்த அணுசக்தி தளத்தை தகர்க்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.

பி-2 ரக அதிநவீன ஸ்டெல்த் ரக குண்டுவீச்சு விமானம் மூலம் அமெரிக்கா இந்த குண்டுகளை ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் மீது வீசியதாக கருதப்படுகிறது.

GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத “பங்கர் பஸ்டர்” (“bunker buster”) வெடிகுண்டு அமெரிக்காவிற்கு மட்டுமே உள்ளது. துல்லியமாக வழிகாட்டப்படும், 30,000 பவுண்ட் (13,600 கிலோகிராம்) எடையுள்ள இந்த வெடிகுண்டு, ஒரு மலைக்குள் ஆழமாக புதைக்கப்பட்டுள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் வளாகத்தை ஊடுருவிச் சென்று தகர்க்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் ஆயுதம் என்ன செய்யும்? அதன் சவால்கள் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்த முடியும்?

அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, GBU-57A/B என்பது, “ஆழமாக புதைக்கப்பட்ட மற்றும் உறுதியாக கட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய ஊடுருவக்கூடிய ஆயுதம்” என அறியப்படுகின்றது.

இந்த வெடிகுண்டு சுமார் ஆறு மீட்டர் நீளமுடையது. இது வெடிக்கும் முன் சுமார் 200 அடி (61 மீற்றர்) ஆழத்தில் நிலத்தின் உள்ளே ஊடுருவக்கூடியது என நம்பப்படுகிறது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டால், ஒவ்வொரு வெடிப்பும், நிலத்தை ஆழமாக துளையிட்டு, இலக்கைச் சேதப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது.

போயிங்கால் தயாரிக்கப்பட்ட எம்ஓபி (MOP), தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன் முறையாகும். இது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் மிஸைல் ரேஞ்ச் (White Sands Missile Range) என்ற இராணுவ சோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

“அனைத்து வெடிகுண்டுகளின் தாய்” என அழைக்கப்படும் 21,600 பவுண்ட் (9,800 கிலோ) எடையுள்ள Massive Ordnance Air Blast (MOAB) வெடிகுண்டை விட இது அதிக சக்தி வாய்ந்தது. இந்த MOAB, 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் போருக்காகப் பயன்படுத்தப்பட்டது.

“MOAB போலவே பெரிய அளவிலான ஆயுதங்களை உருவாக்க முயற்சித்த அமெரிக்க விமானப்படை, வெடிபொருளை மிகவும் வலிமையான உலோகப் பெட்டிக்குள் வைத்திருக்கும் வகையில் வடிவமைத்தது. அதன் விளைவாக உருவானது தான் GBU-57A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்” என்று கூறுகிறார் பிரிட்டனின் ப்ராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலுள்ள அமைதிக் கல்வித் துறையின் பேராசிரியரான பால் ரோஜர்ஸ்.

தற்போது , எம்ஓபி வெடிகுண்டை ஏவுவதற்காக கட்டமைக்கப்பட்டும், நிரலாக்கம் செய்யப்பட்டும் இருப்பது அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் என்ற ஸ்டெல்த் பாம்பர் மட்டும் தான்.

B-2 என அழைக்கப்படும் இந்த போர் விமானம், நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் தயாரித்தது. அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக இந்த விமானம் கருதப்படுகின்றது.

இந்த விமானத்தின் உற்பத்தியாளரான நார்த்ரோப் க்ரம்மனின் கூற்றுப்படி, B-2 விமானம் 40,000 பவுண்டு (18,000 கிலோ) வரை சுமக்கக்கூடியது. ஆனால், இரண்டு GBU-57A/B “பங்கர் பஸ்டர்” வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் B-2 விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை சுமார் 60,000 பவுண்டு (27,200 கிலோகிராம்) ஆகும்.

குண்டுவீச்சுக்குப் பயன்படும் இந்த நீண்ட தூர கனரக விமானம், எரிபொருள் நிரப்பாமல் சுமார் 11,000 கிலோமீற்றர் வரை பறக்கக்கூடியது. பறக்கும் நிலையில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், அதன் வரம்பு 18,500 கிலோமீற்றராக அதிகரிக்கிறது. இதன் மூலம், உலகின் எந்தப் பகுதியையும் சில மணி நேரங்களில் இந்த விமானத்தால் அடைய முடியும் என நார்த்ரோப் க்ரம்மன் கூறுகிறது.

இரான் போன்ற நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நாட்டிற்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டால், B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் கூடுதல் விமானங்களும் அதில் பங்கேற்க நேரிடும். எடுத்துக்காட்டாக, எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக F-22 ஸ்டெல்த் விமானங்கள் பயன்படுத்தப்படலாம். அதன் பிறகு, சேதத்தை மதிப்பீடு செய்யவும், அதற்குப் பிறகும் தாக்குதல்களைத் தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் டிரோன்கள் பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார்.

இந்த எம்ஓபி வெடிகுண்டுகள் அமெரிக்காவிடம் மிகக் குறைந்த அளவே இருப்பதாக அவர் மதிப்பிடுகிறார்.

“அவர்கள் சுமார் 10 அல்லது 20 எம்ஓபி வெடிகுண்டுகளை வைத்திருக்கக்கூடும்” என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ்.

ஃபோர்டோ என்பது ஈரானின் இரண்டாவது அணுசக்தி செறிவூட்டல் நிலையமாகும். நடான்ஸுக்கு பிறகு இதுவும் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது.

டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே சுமார் 95 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கோம் நகருக்கு அருகில், ஒரு மலையின் ஓரத்தில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்திற்கான கட்டுமானம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், 2009ஆம் ஆண்டு இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையம் அங்கு செயல்படுவதை, ஈரான் அதே ஆண்டில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது.

80 மீற்றர் (260 அடி) ஆழத்தில் பாறை மற்றும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதுடன், ஈரான் மற்றும் ரஷ்ய தயாரிப்புகளான தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகளால், ஃபோர்டோ வளாகம் பாதுகாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA), அந்த தளத்தில் ஆயுத தரத்திற்கு அருகிலுள்ள 83.7% தூய்மையுடைய யுரேனியம் துகள்களைக் கண்டறிந்தது.

ஈரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழிப்பதே, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதன் நோக்கம் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார். அதனை, “இஸ்ரேலின் இருப்புக்கே (existential) ஓர் அச்சுறுத்தல்” எனவும் அவர் விபரித்தார்.

எப்போதுமே தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியானது என்றும் அணு ஆயுதத்தை உருவாக்க அவர்கள் எப்போதும் முயற்சி செய்யவில்லை என்றும் ஈரான் கூறி வருகிறது.

ஆனால் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் 35 நாடுகளைக் கொண்ட நிர்வாக குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஈரான் தனது அணுசக்திப் பரவல் தடைகளை மீறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

“ஃபோர்டோ தளம் செயல்பாட்டில் இருக்கும் வரை, ஈரான் அணு ஆயுதம் தொடர்பான அபாயத்தை ஏற்படுத்தும் நிலைமையில் தான் இருக்கிறது. டெஹ்ரானுக்கு, அந்த தளத்தில் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ வாய்ப்பு இருக்கிறது” என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் அணுசக்தி பரவல் தடுப்பு கொள்கைக்கான இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறுகிறார்.

எம்ஓபி பயன்படுத்தப்பட்டாலும், ஈரானின் அணு ஆயுதத் தளங்கள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன, எவ்வளவு பாதுகாப்பாக உள்ளன என்பது தெரியாததால், இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More