Home உலகம்ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை முழுமையாக அழிக்கவில்லை -பென்டகன் தகவல்!

ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை முழுமையாக அழிக்கவில்லை -பென்டகன் தகவல்!

by admin

ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.

இருப்பினும், குண்டுவெடிப்பு மேற்காசிய நாட்டின் அணுசக்தி திட்ட செயற்பாடுகளை சில மாதங்களுக்குள் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் (DIA) தயாரித்த அறிக்கை, இரண்டு முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று கூறுகிறது.

DIA என்பது பென்டகனின் உளவுத்துறைப் பிரிவாகும். மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளையுடன் இணைந்து, தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு பணியாற்றியது.

அறிக்கையின்படி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் முக்கிய உபகரணங்களை சில மாதங்களுக்குள் மீண்டும் இயக்க முடியும். இதன் பொருள் ஈரான் எதிர்பார்த்ததை விட விரைவில் அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடும் என்பதாகும்.

அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு முன்னர் ஈரான் 400 கிலோ யுரேனியக் குவியலை, 60 சதவீதம் செறிவூட்டப்பட்டதாக மாற்றியதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்குதல்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஃபோர்டோவின் செயற்கைக்கோள் படங்கள், தளத்தின் நுழைவாயிலில் நிலைநிறுத்தப்பட்ட 16 சரக்கு லொறிகளைக் காட்டியது. அவை கையிருப்பை ரகசிய இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்ற ஜனாதிபதி ட்ரம்பின் கூற்றுக்கு முரணானது. சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை மிகப்பெரிய வெற்றியாகப் பாராட்டினார்.

“இந்தத் தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றியாகும், இதன் மூலம் ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து கூறினார்.

ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி தளங்களில் மூன்று, நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி செறிவூட்டல் வசதிகளை அமெரிக்கா அழித்துவிட்டதாகவும் மார்தட்டிக் கொண்டார்.ஆனால், பென்டகனின் உள் அறிக்கை வேறுபட்ட கோணத்தை தற்சமயம் வெளிக்காட்டுகிறது.குறிப்பாக ஃபோர்டோ, தாக்குதல்களில் இருந்து தப்பியதற்கான அறிகுறிகளைக் காட்டியதாகவும் அறிக்கை கூறியது.

ஃபோர்டோ குறித்து பென்டகன் எச்சரிக்கை

ஃபோர்டோ ஈரானின் மிகவும் பாதுகாக்கப்பட்ட வசதிகளில் ஒன்றாகும்.

இது ஜாக்ரோஸ் மலைகளுக்கு அடியில் சுமார் 45 முதல் 90 மீட்டர் (தோராயமாக 150 முதல் 300 அடி) கடினமான பாறையின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஃபோர்டோவின் நிலத்தடி இருப்பிடம் பென்டகனுக்கு ஏற்கனவே ஒரு கவலையாக இருந்தது.

ஜனவரி மாதம் நடந்த ஒரு மாநாட்டில், அமெரிக்காவின் வலிமையான அணுசக்தி அல்லாத குண்டு – 30,000 பவுண்டுகள் எடையுள்ள GBU-57 ‘பதுங்கு குழி வெடிப்பு’ – கூட அந்த வசதியை முழுமையாக அழிக்காது என்று பென்டகனின் உயர் அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.

கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில், B-2 குண்டுவீச்சு விமானங்கள் இந்த GBU-57 குண்டுகளில் 12 குண்டுகளை ஃபோர்டோ மீதும், மேலும் இரண்டு நடான்ஸ் மீதும் வீசின.இதற்கிடையில், அமெரிக்க கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் இஸ்பஹானில் சுமார் 30 டோமாஹாக் ஏவுகணைகளை ஏவியது.

அறிக்கையை கடுமையாக சாடிய ட்ரம்ப் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களை அவமானப்படுத்தியதற்காக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் செய்திச் சேவை ஆகியவற்றை ட்ரம்ப் கடுமையாக சாடினார்.

“ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன! டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் தாக்கப்படுகின்றன,” என்று அவர் ட்ரூத் சமூக ஊடகத்தளத்தில் பதிவிட்டார். அதேநேரம், வெள்ளை மாளிகையும் உளவுத்துறை மதிப்பீட்டை மறுத்து, அந்த அறிக்கையை “போலி செய்தி” என்று அழைத்தது.

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில்,

இந்த அறிக்கை ஜனாதிபதி ட்ரம்பை இழிவுபடுத்துவதற்கும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க ஒரு கச்சிதமாக செயல்படுத்தப்பட்ட பணியை நடத்திய துணிச்சலான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும் ஒரு தெளிவான முயற்சியாகும் – என்று கூறினார்.

இதேவ‍ேளை ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஈரான் மீதான தாக்குதல் பணியை வழிநடத்த உதவிய கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன், அணுசக்தி தளங்கள் “கடுமையான சேதத்தையும் அழிவையும் சந்தித்துள்ளன” என்று கூறினார். ஆனால், இறுதி சேத மதிப்பீடு இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

நன்றி – ஆதவன் நியூஸ்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More