Home இலங்கைசெம்மணியில் இரு மனித புதைகுழிகளில் இருந்து இன்றும் 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணியில் இரு மனித புதைகுழிகளில் இருந்து இன்றும் 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

by admin

 

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும்  “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த 10ஆம் திகதியுடன் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு 11 நாட்களின் பின்னர் இன்றைய தினம் 16ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது
அதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றினை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 25 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, 65 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகழ்விடத்தில்  குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்
அதேவேளை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அகழ்வு நடைபெறும் இடத்தில் பிரச்சன்னமாகி இருந்தனர்.

மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் இதுவரை யாழ்ப்பாணம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், காவல்துறைமா அதிபரின் உத்தரவுக்கு அமைய,  இந்த விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் ஒப்படைக்கபட்டுள்ள நிலையிலையே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அகழ்வு இடம்பெறும் இடத்தில் பிரச்சன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More