நேபாளத்தில் இளைஞர்கள் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் கே.பி சர்மா ஒலி பதவி விலகியுள்ளார்.
அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்து போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
26 சமூக வலைத்தளங்களுக்கு அந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஜெனரல்-இசட் நடத்திய சமூக ஊடக ஆதரவு போராட்டம் ஊழல் எதிர்ப்புப் போராட்டமாக மாறியிருந்தது.
இந்த சூழலில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சமூக ஊடகங்கள் மீதான தடையை திரும்பப் பெற்ற நிலையில், பரவலான ஊழல் காரணமாக போராட்டக்காரர்கள் அவரது பதவிஅ விலகலை கோரி வந்தனர்.
குறிப்பாக, பல்வேறு அமைச்சர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நேபாளத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு அமைச்சர்களின் குடும்பங்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அதேவேளையில், சாதாரண நேபாள குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தக்கூட போராடுகிறார்கள் என இளைஞர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போராட்டத்தில் ஏற்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் நேபாள பிரதமர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் உயர் நீதிமன்றத்திற்கும் தீ வைப்பு!
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் இன்று காத்மாண்டுவில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கும் தீ வைத்துள்ளனர்.
அத்துடன் போராட்டக்காரர்கள் பாராளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமரின் வீட்டிற்கும் தீ வைத்து பல கட்டிடங்களை அழித்துள்ளனர்.
நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் – சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது!
நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் (TIA)அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டமையை கண்டித்து நேபாளத்தில் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த தடை மீளப் பெறப்பட்ட நிலையில், பிரதமர் பதவி விலகும் வரை ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேபாள அரசியல் ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மேலும் தீவிர மடைந்தது.
இந்த சூழலில் நேபாள பிரதமர் பதவி விலகிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேபாள பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.
அத்துடன் அரசியல் வாதிகளின் வீடுகளுக்கும் தீ வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

