நெசவுத் தொழிலானது ஆரம்ப காலத்தில் எமது கிராமமான புதுக்குடியிருப்பை வந்தடையும் முன் காத்தான்குடி, பாலமுனை ஆகிய முஸ்லிம் கிராமங்களில் செய்யப்பட்ட தொழிலாக காணப்பட்டது. அக்கிராமங்களில் நெசவுத்தொழில் பிரதான தொழிலாக காணப்பட்ட அக்காலகட்டத்தில் தொழிலாளர்களாக பெரும்பாலும் தமிழர்களே காணப்பட்டனர். ஆண், பெண் என இரு பாலரும் தொழிலாளர்களாக காணப்பட்டனர். அதிலும் பெரும்பாலான நெசவுத் தொழிலாளர்களாக எமது கிராமத்தைச் சேர்ந்தவர்களே காணப்பட்டனர்.
1970 ஆம் ஆண்டின் பின்னரான காலகட்டத்தில் நெசவுத் தொழிலானது எமது கிராமத்தில் அதிகமாக செய்யும் கைத்தொழிலாக மாற்றம் பெற்று. நெசவுத் தொழில் என்று கூறும் பொழுது ஒரு தொழிலை மட்டும் குறிப்பதாக இருந்திருக்கவில்லை. பல்வேறு வகையான அம்சங்களை கொண்டமைந்ததாக காணப்படுகிறது. நெசவு செய்தல் என்பது நெசவுத்தொழிலின் ஒரு பகுதியே. அதனோடு இணைந்ததாக அதன் அடிப்படையாக நூல் பதப்படுத்தல், வர்ணம் இடல், அதனை வொவின், பேண் கட்டைகளில் சுற்றுதல், பாவோடுதல், நெசவு செய்தல் என பல வகையான உப தொழில்களோடு சேர்ந்தே காணப்படுகிறது. இந்த நெசவுத் தொழிலுக்கு பல வகையான உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முக்கிய பகுதியாக தறி காணப்படுகிறது. அதனோடு இணைந்ததாக பாப்றோல் நூல் சுற்றும் கருவி என்பனவும் இன்னும் சில உப கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன . வொவின், பேண், நாடா என இவற்றிற்கான பெயர்கள் கிராமிய பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகின்றன. இவை தமிழ்ச் சொற்களா, ஆங்கிலச் சொற்களா, அல்லது வேறு மொழி சொற்கள் என்பது சரியாக கண்டறியப்படாமல் நெசவுத்தொழில் சார்ந்த தொழிலாளர்களால் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.
காத்தான்குடி, பாலமுனை ஆகிய இடங்களுக்குச் நெசவுத் தொழில்களுக்கு சென்றுவந்த வேளை தொழிலாளர்களுக்கு பிரயாணம் செய்வது அக்காலகட்டத்தில் ஒரு சிரமமான காரியமாக இருந்தமைனால் அந்த கைத்தறி எனும் இயந்திரத்தை தங்களது வீடுகளிலேயே ஒரு இடம் ஏற்படுத்தி செய்து அங்கே கொண்டு வந்து. கைத்தறி நெசவு செய்தலை மேற்கொண்டனர். அது அவர்கள் வாழ்க்கையில் நெசவுத் தொழிலின் இலகுத் தன்மையையும் போக்குவரத்துக்கான நேரம் குறைந்தும் தொழில் செய்யும் நேரம் கூடிய நேரமாகவும் இருந்தது. இது அவர்களுக்கு புது உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது இதனால் ஒரு குடும்பத்தில் பலர் தொழிலை செய்ய முன் வந்ததனால் எனது கிராமம் ஒரு கைத்தறி ஆலை போல் பெரிய தொழிற்சாலை போலவும் காணப்பட்டது.
இவ்வாறு கூலிக்கு நெசவுத்தொழில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை தாங்களே சுயமாக இத் தொழிலை ஏற்பாடு செய்யலாம் எனும் எண்ணம் ஒரு சிலரிடம் காணப்பட அதற்கான பொருளாதார வசதியும் அவர்களிடம் காணப்பட்ட நிலையில் எனது கிராமத்திலும் நெசவு நிலையங்கள் உருவாகின. இதனால் ஆங்காங்கே சிறு முதலாளிமார்களும் உருவாகி நெசவுத்தொழில்களின் தொகையும் அதிகரித்து பொருளாதார மிகுந்து காணப்பட்ட ஒரு கிராமமாக புதுக்குடியிருப்பு திகழ்ந்தது.
நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார நிலையின் மாற்றத்தில் நெசவு உற்பத்தி பொருட்களின் வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. அது நெசவுத்தொழிலின் போக்கிலும் பின்னடைவு நிலையை ஏற்படுத்தியது இதன் காரணமாக படிப்படியாக நெசவுத்தொழில் நாடளாவிய ரீதியில் வீழ்ச்சி கண்டது. எனது கிராமத்தில் கிட்டத்தட்ட நெசவுத்தொழில் நின்று விட்டது. இந்த நிலை நெசவுத் தொழிலாளர்களின் வாழ்விலும் பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தியது.
குறிப்பிட்ட கால இடைவெளியின் பின்னர் அரசியல் மாற்றம் மற்றும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்குவிப்பு அளிக்கப்பட்ட நிலையில் முடங்கிப் போயிருந்த அனைத்து செயற்பாடுகளும் மீளவும் உருவாக்கம் பெறும் நிலை ஏற்பட நெசவுத்தொழிலும் துளிர்விட்டு வளர்ந்து வரும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையினை ஒட்டி கிராமத்தின் குறிப்பிட்டுச் சொல்ல கூடிய அளவுக்கு நெசவுத்தொழிலும் மீண்டும் உருவாக்கம் சபெற்றது. முன்னைய நெசவுத்தொழிலின் முதலாளி மார்களை விட புதியபுதிய. முதலாளிமார்களும், நெசவு நிலையங்களும் உருவாகின.
இன்று புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிய நெசவு நிலையங்கள், புதிய முதலாளிகள், புதிய நெசவு தொழிலாளர்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடன் நெசவுத்தொழில் செய்யத் தொடங்கியுள்ளனர். நெசவுத்தொழிலின். உருவாக்கம் புதுக்குடியிருப்பின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர்களை முதலாளிமார்கள் சுரண்டாதவாறு இருப்பது அவசியம். சூழலுடன் நட்புறவுடன் இருப்பது காலத்தேவையே.
தேவராசா நிதர்சனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

