பாடசாலை மாணவர்களுக்கு பச்சைகுத்தும் நிலையங்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைக்கு காவற்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட செயலர்கள் கோரியுள்ளனர்.
வட மாகாண காவற்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் ஆகியோருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தில்,பெண் காவற்துறையினரின் பற்றாக்குறை, சட்டவிரோத மணல் அகழ்வு, அரச காணி தொடர்பான பிணக்குகளில் பிரதேச செயலர்களுடன் இணைந்து செயற்பட காவற்துறையினர் தவறுகின்றமை ஆகிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு விற்பனை மிகப் பிரதான பிரச்சினையாக உள்ளதாகச் சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலர், அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபடும் குடும்பங்கள் தொடர்பான விவரங்களை திரட்டியுள்ளபோதிலும் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் நிலவுதாகக் குறிப்பிட்டார். அதேபோன்று சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் மற்றும் கால்நடைகள் கடத்தல் என்பனவும் நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி என்பன இடம்பெறுவதாக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.
ஒலிபெருக்கி பாவனைக்கான கட்டணம் காவற்துறையினர் அறவிடுகின்றமையால் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும்போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பொறுப்பும் காவற்துறையினருக்கு உள்ளது எனக் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு பெரும் பிரச்சினையாக உள்ளதாக மாவட்டச் செயலர் குறிப்பிட்டார்.
எனது தலைமையில் விசேட குழு அமைத்து இதற்கு எதிரான நடவடிக்கை எடுத்தேன். 3 மாதங்களுக்குள் 130 டிப்பர்களை பிடித்தோம்.
கசிப்பு உற்பத்தி தொடர்பான விவகாரத்தில் பொலிஸாரை விட மதுவரித் திணைக்களத்தினருக்கு கூடுதல் அதிகாரங்கள் இருக்கின்றன. அவர்கள் இந்த விடயத்தில் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தெரிவித்தார்.
வடக்கில் மண்ணெண்ணையில் ஓடும் பேருந்துகள் – அனுமதி பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை
வடக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சில பேருந்துகள் மண்ணெண்ணையில் இயங்குகின்றன. அவ்வாறான பேருந்துகள் தொடர்பில் அறியத் தந்தால் அவர்கள் டீசலுக்கு மாறும் வரை அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வோம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண காவற்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் ஆகியோருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என்பது அரச நிறுவனம் என்பது பல காவற்துறையினருக்குத் தெரிவதில்லை
அத்துடன் அதிகார சபை சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கின்றபோது அதனால் நடவடிக்கைக்கு உள்ளாக்கும் தரப்பு காவற்துறை நிலையங்களில் முறைப்பாடு செய்தால், காவற்துறையினர் அதிகார சபையையும் விசாரணைக்கு அழைத்து அதிகார சபையை மலினப்படுத்துகின்றனர்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சில பேருந்துகள் மண்ணெண்ணையில் இயங்குகின்றன. அதனை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவற்துறையினர் அவ்வாறான பேருந்துகள் தொடர்பில் அறியத் தந்தால் அவர்கள் டீசலுக்கு மாறும் வரை அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வோம் என தெரிவித்தார்.

