Home இலங்கைகட்புலனாகா அரங்கு கட்புலனாகாத போர்? நிலாந்தன்.

கட்புலனாகா அரங்கு கட்புலனாகாத போர்? நிலாந்தன்.

by admin

 

கடந்த 30ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் அரசாங்கத்தின் போதைப் பொருளுக்கு  எதிரான ஒரு செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரமுகர்கள் அமர்ந்திருந்த அரங்கிற்குள் திடீரென்று ஒருவர் மேடையை நோக்கி வேகமாக நகரத் தொடங்கினார். அங்கிருந்த பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரிகள் அவரைத் தடுக்க முயற்சித்தாலும் அவர் மேடையில் ஏறி விட்டார். உணர்ச்சிக் குழம்பாக காணப்பட்ட அந்த நபர் மேடையில் நின்று அரங்கில் இருந்தவர்களை நோக்கி அழுதழுது கதைக்கத் தொடங்கினார்.இல்லை,நடிக்கத் தொடங்கினார் என்றுதான் சொல்லலாம். ஏனென்றால்,அது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நாடகம்.கண்ணுக்குப் புலனாகாத அரங்கு “இன்விசிபிள் தியட்டர்” என்று அதை அழைப்பார்கள். போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்ட தனிநபர் நாடகம் அது.அதில் நடித்தவர் பிரேம் ஜெயந்த கபுகே என்ற கலைஞர்.

நல்ல விஷயம்.நாடு முழுவதுக்குமான ஒரு முக்கியமான வேலைத் திட்டத்தை அவ்வாறு கலை உணர்வோடு அணுகியதும் அரங்கில் கூடியிருந்தவர்கள் எதிர்பாராத விதத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு கலை நிகழ்ச்சி மூலம் விழிப்பை ஏற்படுத்தியதும் பாராட்டத்தக்கவை.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இதயமாக இருக்கும் ஜேவிபி ஓர் அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில் அது மக்கள் மத்தியில் எப்படிக் கருத்தை கொண்டுபோக வேண்டும் என்ற விடயத்தில் தெளிவாகச் செயல்படுகிறது.

போதைக்கு எதிரான போரை அனுர கலை உணர்வோடு தொடங்கியிருக்கிறார். ஆனால் போதைக்கு எதிரான யுத்தம் ஒரு கலையா?

நிச்சயமாக இல்லை. அது ஈவிரக்கம் இல்லாத ஒரு கொலை நிகழ்ச்சிச் திட்டம் என்பதற்கு அகப்பிந்திய உதாரணம் பிரேசில்.பிலிப்பைன்ஸ்,சில லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவற்றிலும் நிலைமை அதுதான்.ஏனென்றால் போதையை ஒழிப்பது என்பது ஒரு வகையில் போர்தான். நிச்சயமாக அது இன்விசிபில் தியட்டர் அல்ல.

அப்படி ஒரு போரைச் செய்ய அனுர தயாரா? அந்தத் தொடக்க நிகழ்வில்  அவர் கூறுகிறார்… “நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன், நாடே ஒன்றுபட்டு. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக, தனிப்பட்ட ஒருவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும், தனியாக முடியாது. அரசாங்கத்தால் மட்டும் முடியாது.பொலிஸால் மட்டும் முடியாது.அரச கட்டமைப்பால் மட்டும் முடியாது.அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுதான் சந்தர்ப்பம்…..”

அவருடைய உரையின்படி  போதைக்கு எதிரான போராட்டத்தை  முழு நாட்டுக்கும் உரியதாக அவர் வர்ணிக்கிறார். அதாவது தமிழ்ப் பகுதிகளையும் இணைத்து நாட்டை ஒரு முழு அலகாகக் கருதி அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஆனால்,கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய கஜேந்திரக்குமார் தமிழ்ப் பகுதிகளில் உள்ள வேறு ஒரு யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டினார்.அரசாங்கம் வடக்கில் விதைத்ததை தெற்கில் அறுவடை செய்கிறது என்ற பொருள்பட அவர் உரையாற்றினார். அதாவது தமிழ் மக்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையை ஊக்குவித்து, போதைப்பொருள் வலையமைப்பை உருவாக்கி, தமிழ் மக்களைப் போதையில் மிதக்க விடுவது என்பது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் ஒரு நிகழ்ச்சி நிரல் என்று கஜேந்திரக்குமாரும் உட்பட பெரும்பாலான தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கடந்த 16 ஆண்டுகளாகக் கூறிவருகிறார்கள்.

2009க்குப்பின் தமிழ் இளையோர் இலட்சியவாதத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு திரளாக மாறுவதை தடுப்பதற்கு அவர்களைப் போதையால் திசைதிருப்பி போதையில் மூழ்கடிப்பதே அந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் ஆகும்.அதன்மூலம் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் இனிமேலும் தலையெடுக்க முடியாதபடிக்கு அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்படும்.அந்த அடிப்படையில் பார்த்தால் வடக்கு கிழக்கில் போதைப் பொருள் வலையமைப்பு எனப்படுவது  ஒரு வகையில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் இன்விசிபிள் யுத்தத்தின்-கட் புலனாகா யுத்ததின் ஒரு பகுதி தான்.

கஜேந்திரக்குமார் அதனைத் தனது நாடாளுமன்ற உரையிலும் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களிலும் தெரிவித்திருக்கிறார்.ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கூறியதாக ஒரு தகவலை அவர் சுட்டிக்காட்டுகிறார். பெருமளவு போதைப் பொருட்கள் வடக்குக்கிழக்கு கடல் வழியாகவே நாட்டுக்குள் வருவதாக அந்த மேஜர் ஜெனரல் கூறியிருக்கிறார்.

ஆனால் வடக்கு கிழக்கின் நீண்ட கடல் எல்லைகளை முழுக்க முழுக்க ஸ்ரீலங்கா கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.அப்படியிருக்க அவர்களை மீறி எப்படிப் போதைப் பொருள் உள்ளே வருகிறது? அதுபோலவே போதைப்பொருள் குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை மக்கள் போலீசாருக்கு வழங்கும்பொழுது அத்தகவல் உடனடியாகவே குற்றவாளிகளுக்குச் சென்றுவிடுகிறது.கைது செய்யப்படுகின்ற குற்றவாளிகள் பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள்.போன்ற குற்றச்சாட்டுக்கள் தமிழ் பகுதிகளில் நடக்கின்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன.முன்னாள் வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ்,இந்நாள் ஆளுநர் வேதநாயகன் போன்றவர்கள் அதைக் குறித்து ஏற்கனவே பிரஸ்தாபித்திருக்கிறார்கள்.

அண்மையில் மாற்றம் அறக்கட்டளை நடத்திய ஒரு நூல் வெளியீட்டு விழாவிலும் ஆளுநர் வேதநாயகன் அதைச் சுட்டிக்காட்டி பேசியிருந்தார். மாற்றம் அறக்கட்டளை எனப்படுவது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரேயொரு அரசு சாராத போதைப்பொருள் புனர் வாழ்வு மையம் ஆகும்.

நீங்கள் வடக்கு கிழக்கில் விதைத்தவற்றைத்தான் தெற்கில் அறுவடை செய்கின்றீர்கள் என்ற பொருள்பட கஜேந்திரக்குமார் கடந்த 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரை ஆற்றினார்.அதைத்தான் முகநூலில் ஒரு மருத்துவர் எழுதினார் “வினை விதைத்தவன் வினையை அறுக்கிறான்” என்று.

எனவே தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தின்  ஆளுநர்கள், போதையில் மூழ்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள்,ஊடகவியலாளர்கள்…போன்றவர்கள் தரும் தகவல்களின்படி தமிழ்ப்பகுதிகளில் போதைப் பொருள் வலையமைப்பு எனப்படுவது கட்டமைப்புசார் இன அழிப்பின் ஒரு பகுதிதான்.இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு இன்விசிபிள் போர்.

இந்தப் போரை அனுரவால் முடிவுக்கு கொண்டு வர முடியுமா? எந்தப் படைக் கட்டமைப்பையும் போலீஸ் கட்டமைப்பையும் வைத்துக்கொண்டு தெற்கில் அவர் போதையை ஒழிக்கப்போவதாக கூறுகிறாரோ,அதே கட்டமைப்புகள்தான் தமிழ்ப் பகுதிகளில் போதைப் பொருள் வலையமைப்பைப் பேணுகின்றன என்று தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.எனவே முழுநாட்டையும் இந்த விடயத்தில் ஒர் அலகாகக் கருதி தெற்கில் போதை வலை பின்னலை முறியடிப்பது போல வடக்கிலும் அதை முறியடிக்க முடியுமா?

வடக்கில் அவ்வாறு செய்வது என்று சொன்னால் அனுர முப்படைகளின் தளபதியாக எந்தெந்தக் கட்டமைப்புகளுக்குத் தலைமை தாங்குகின்றாரோ அதே கட்டமைப்புகளுக்கு எதிராக அந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியிருக்கும்.அப்படிப்பார்த்தால் தேசிய மக்கள் சக்தி  வாக்களித்த மாற்றத்தை அதன் மெய்யான பொருளில் தமிழ் மக்களுக்குக் காட்டுவதற்குரிய ஒரு சோதனைக் களமாக அது அமையுமா?

அல்லது இது எதிர்க்கட்சிகளைத் தலையெடுக்க விடாமல் முடக்கும் அல்லது தற்காப்பு நிலைக்குத் தள்ளும் ஒரு நடவடிக்கையாக முடிந்து விடுமா?

கடந்த சில மாதங்களாக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம், பாதாள உலகக் குழுக்களைக் கைது செய்யும் நடவடிக்கை போன்றன எதிர்க்கட்சிகளைப் பெருமளவுக்கு தற்காப்பு நிலைக்கு தள்ளிவிட்டுள்ளன. ஒருபுறம் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதியும் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள்,அரச அதிகாரிகள்,முன்னாள் அமைச்சர்கள் என்று உயர் பதவி நிலைகளில் இருந்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கிறது.இன்னொருபுறம் பாதாள உலகக் குற்றவாளிகள், போதைப்பொருள் குற்றவாளிகள் என்று பெருந்தொகையானவர்களைக் கைது செய்து வருகிறது.

பாதாள உலகம் எங்கேயோ ஓரிடத்தில் அரசியல்வாதிகளோடும் கட்சிகளோடும் தொடர்புற்றிருப்பதாகவே தெரிகிறது. எனவே இந்த நடவடிக்கைகள் யாவும் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு கட்சிக்கு அல்லது அரசியல்வாதிக்கு எதிரானவைகளாகத்தான் தெரிகின்றன. இதன்மூலம் ஏனைய கட்சிகள் யாவும் எங்கேயோ ஓரிடத்தில் குற்றக் கும்பல்களோடு தொடர்புடையவை என்ற ஒரு தோற்றம் மிகவும் கச்சிதமாகக் கட்டியெழுப்பப்படுகின்றது.இது அதன் தர்க்கபூர்விளைவாக தேசிய மக்கள்சக்தி அரசாங்கமானது சுத்தமானது, ஆனால் அதற்கு எதிரான எதிர்க்கட்சிகள் பெரும்பாலானவை குற்றக் கும்பல்களோடு தொடர்புடையவை என்ற ஒரு அரசியல் தோற்றத்தை கட்டியெழுப்புவதற்கு உதவுகின்றது.இதனால் எதிர்க்கட்சிகள் பதட்டம் அடைகின்றன; பெருமளவுக்குத் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

இவ்வாறு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்ட எதிர்க்கட்சிகள் தவிர்க்க முடியாமல் ஒன்றுசேர வேண்டிய ஒரு தேவை; நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. “கூட்டு எதிரணியினரின் நுகேகொடைக் கூட்டம் வெற்றியளிக்கவேண்டும் எனப் பிராத்திக்கிறேன்.ஏனெனில், பொதுமக்களுக்கு பயனற்ற ஒன்றாக அது உள்ளது. மேற்படி கூட்டத்தை நடத்துவதால் பாதாள உலகக் கோஷ்டியையோ அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தையோ தடுக்க முடியாது.எனவே அது பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் ஒரு விடயமாக இருக்காது. என்று அமைச்சர் லால்காந்த கூறியிருப்பதும் அதைத்தான்.எனவே அரசாங்கம் போதை விலையமைப்பையும் பாதாள உலகம் வலையமைப்பையும் முழுமையாக ஒடுக்குமோ இல்லையோ இப்போதைக்கு எதிர்க்கட்சிகளைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியிருக்கின்றது.

ஆனால் தமிழ்ப் பகுதிகளில் அரசியல் யதார்த்தம் அதுவல்ல.சுகததாஸ உள்ளரங்கில் போதை ஒழிப்புத் திட்டத்தை கட்புலனாகா அரங்கின்மூலம் கவர்ச்சியாகத் தொடக்கி வைப்பது வேறு.தமிழ்ப் பகுதிகளில் தமிழ் அரசியல்வாதிகள் குற்றஞ்சாற்றுவதுபோல கட்டமைப்பு சார் இன அழிப்பின் ஒரு பகுதியாகத் தொடரும் கட்புலனாகாப் போரை நிறுத்துவது வேறு. ஏனென்றால் இங்கு அனுர போர் புரிய வேண்டியது முப்படைகளின் தளபதியாக தான் தலைமை தாங்கும் கட்டமைப்புக்கும் எதிராகத்தான்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More