Home இலங்கைவடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்

வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்

by admin

 

வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கௌரவமான வாழ்வை இந்த மண்ணில் நிலை நிறுத்தும் வரை, இந்த மண்ணில் நாங்கள் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது அரசியல் இயக்கத்தின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைக் காரியாலம் இன்றையதினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட பின்னர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது அரசியல் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக அல்லது அதனுடைய வகிபாகம் தொடர்பாக பலரும் பலவிதமாக கருத்துக்கள் சொல்ல முடியும்.
ஒரு பலவீனமான அமைப்பாக எமது அமைப்பை எங்களுடைய கட்சியை பலரும் விமர்சிக்கக்கூடும்.

ஆனால் தமிழ் மக்கள் கூட்டணி தான் தமிழ் மக்களுடைய எதிர்காலம் என்கின்ற அசைக்க முடியாத செய்தியை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறுகின்றேன்

2009 ஆம் ஆண்டு வரை தங்களுடைய இன்னுயிர்களை ஈகம் செய்து ஒப்பற்ற தியாகங்களை புரிந்து இந்த மண்ணின்  எழுச்சிக்காக தமிழ் மக்களுடைய உரிமைக்காக களமாடி மடிந்த அத்தனை உயிர்களின்  ஆத்மாக்கள் மீது சத்தியம் செய்தவர்களாக நாங்கள் எங்களுடைய பயணத்தை எங்களுடைய அரசியல் இயக்கத்தை எங்களுடைய அரசியல் கட்சியை நாங்கள் முன்னோக்கி நடத்திக் கொண்டிருக்கின்றோம். அந்த இலட்சியத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடப்போவதில்லை.

எமது மக்கள் இந்த இலங்கை தீவில் குறிப்பாக வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கௌரவமான வாழ்வை இந்த மண்ணில் நிலை நிறுத்தும் வரை இந்த மண்ணில் நாங்கள் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது அரசியல் இயக்கத்தின் தொடர்ச்சியான போராட்டம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது.

உண்மையிலேயே எங்கள் மீது பிரயோகிக்கப் படுகின்ற அழுத்தங்கள் எத்தனை துரோகங்கள் எத்தனை சதிகள் வந்தாலும் நாங்கள் எமது இலட்சியப் பாதையில் இருந்து விலகப் போவதில்லை, இன்று நாம் மிகப்பெரிய சூழ்ச்சிகளுக்குள்ளும் சதி வினைகளுக்குள்ளும் நாங்கள் அகப்பட்டிருக்கின்றோம்

ஆணித்தரமாக நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எங்களுடைய கட்சி சந்தர்ப்பவாத அரசியல் இயக்கமாக அரசியல் கட்சியாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் இருந்து விடப் போவதில்லை.

என்பதையும் நாங்கள் மிக ஆணித் தரமாக எமது மக்களுக்கு நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

இந்த மண்ணில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இந்த மண்ணில் குறிப்பிட்ட அல்லது நிலைக்கொண்டிருக்கக்கூடிய தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுடைய பணியை தமிழ் மக்களை ஒரு தேசமாக காட்டி எழுப்புகின்ற வரலாற்று பயணத்தை சரியாக மேற்கொள்ளவில்லை என்பது எங்களுடைய ஆணித்தரமான நம்பிக்கையாக இருக்கிறது.

அதிலிருந்து விலகி ஒரு முன்னுதாரணமான எமது கட்சி பயணிக்க வேண்டும். எவ்வாறு தன்னுடைய கிளைகளை பரப்பி தன்னுடைய கட்டுமானங்களை இந்த மண்ணிலே நிறுவ வேண்டும்.

அத்தனை விதங்களுக்கும் முன்னுதாரணமாக இந்த மண்ணிலே இந்த கட்சி செயற்பட்டு காட்டும் என்பதை நீங்கள் எதிர்வரும் காலங்களில் எங்களுடைய மக்கள் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

அந்த வகையிலே நாங்கள் இழப்புகளுக்கோ அல்லது தேர்தல் தோல்விகளுக்கோ பயந்தவர்களாக நாங்கள் ஒதுங்கி போகப்போகமாட்டோம் என்பதை கூறி, எதிர்கால இந்த தேசத்திற்கான பாய்ச்சலில் தமிழ் தேசியத்தின் எழுச்சியின் பயணத்திலே நீங்கள்  அணி திரண்டு பயணிக்க வேண்டும் என்று நான் அன்போடு உரிமையோடு நான் இந்த சந்தர்ப்பத்திலே வேண்டிக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More