Home இலங்கைசங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது

by admin

 

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான  சந்தேகநபரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார்.

குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில் வித்துவானை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று  காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தவில் வித்தவானுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டு , தொலைபேசி ஊடாக உரையாடி வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியளவில் யாழ் . மாவட்ட செயலகத்திற்கு அருகில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று , அப்பெண்ணை அழைத்துக்கொண்டு பூநகரி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்தாகவும் , அதன் போது, பூநகரி பகுதியில் அப்பெண்ணுக்கு குடிப்பதற்கு , குளிர்பானம் வழங்கியதை அடுத்து அப்பெண் மயக்கமடைந்த நிலையில் ,அவரை கொலை செய்து கடலில் வீசிவிட்டு தான் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதிக்கு சென்று தடய பொருட்களை அழித்து விட்டு , யாழ்ப்பாணம் திரும்பியதாக சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக  காவல்துறை   தகவல்கள் தெரிவிக்கின்றன
அதேவேளை சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த சுமார் 10 பவுண் நகையை சுன்னாகம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து 17 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , அப்பணத்தினை தனது சொந்த தேவைகளுக்காக செலவழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.  அதன் அடிப்படையில் குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை  காவல்துறையினர் மீட்டுள்ளனர்
சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தி , மேலதிக விசாரணைகளுக்காக 72 மணி நேரங்கள் காவல்துறைக்காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் காவல்துறையினர்  அனுமதி கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னணி. 
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியளவில் , வுனியாவில் உள்ள நண்பி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில் மறுநாள் 12ஆம் திகதி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அதனை அடுத்து பெண்ணின் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை, தலையில் பலமாக தாக்கப்பட்டமைக்கான சான்றுகள் காணப்பட்டதுடன் , முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரிய கூடிய திரவம் ஊற்றி எரியூட்டப்பட்டமைக்கான சான்றுகளும் காணப்பட்டன.
பெண்ணின் நுரையீரலுக்குள் நீர் புகுந்தமையால் ,  ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்தது.  அதேவேளை பெண்ணின் முகத்தில் எரிய ஊட்டிய பின்னரே அவரை நீரினுள் வீசி இருக்க வேண்டும் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அத்துடன் பெண் வீட்டில் இருந்து புறப்படும் போது, 10 பவுண் நகைகளை அணிந்து சென்றதாகவும் , சடலம் மீட்கப்படும் போது அவை காணப்படவில்லை எனவும் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் , சம்பவம் நடைபெற்று ஓரிரு நாட்களில் கொலை செய்யப்பட்ட பெண் வேலை செய்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றிய மற்றுமொரு பெண் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையிலையே இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More