184
யாழில் முதியவர் படுகொலை: இருவருக்கு மரண தண்டனை விதிப்பு! 
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற கோரமான படுகொலைச் சம்பவம் தொடர்பாக 14 ஆண்டுகளின் பின்னர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை யாழ். மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கொடிகாமம் – மந்தைவெளிப் பகுதியில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அக்காலப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீண்டகாலமாக யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் அவர்கள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கின் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபித்தார்.
குற்றவாளிகளாகக் காணப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
“ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில், நிர்ணயிக்கப்படும் இடத்தில், குற்றவாளியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது” என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலத்தின் பின் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ள நீதியாகப் பார்க்கப்படுகிறது.
________________________________________
Spread the love

