யாழ்ப்பாணத்தில் காவல்துறையினாின் கட்டளையை மீறி 20 கிலோமீட்டர் தூரம் துரத்திச் செல்லப்பட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரைகாவல்துறையினர் சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடித்துள்ளனர். பருத்தித்துறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை காவல்துறையினா் நிறுத்தச் சொன்னபோது, சாரதி வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் செலுத்தி தப்பியோடியுள்ளார்.
சுமார் 20 கிலோமீட்டர் தூரம் காவல்துறையினா் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு சாரதி ஓட முயற்சித்தபோது காவல்துறையினா் அவரை மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை விசாரித்தபோது, அவர் ஒரு முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே சட்டவிரோத செயல்களுக்காக அவர் காவல்துறை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்பதும் அம்பலமானது.
கைது செய்யப்பட்ட நபர், தனக்கு காவல்துறை திணைக்களத்தில் இருந்த பழைய தொடர்புகள் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி நீண்டகாலமாக சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Tag Words: #JaffnaNews #PoliceChase #SandSmuggling #ExPoliceArrested #PointPedro #CrimeSriLanka #LKA #BreakingNews2026 #IllegalMining

