அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்கள் (Northeast US) தற்போது ஆர்க்டிக் துருவப் பகுதியில் இருந்து வீசும் கடும் குளிர்காற்றினால் (Arctic Blast) உறைந்து போயுள்ளன. சில பகுதிகளில் காற்றின் குளிர்ச்சியானது மைனஸ் 30 டிகிரிக்கும் (-30°F Wind Chill) கீழே செல்லக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
துருவச் சுழற்சி (Polar Vortex) காரணமாக நிலவும் இந்த கடும் குளிர், உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சாதாரண வெப்பநிலையை விட, காற்றின் வேகம் காரணமாக உடல் உணரக்கூடிய குளிர்ச்சி -30°F (-34°C) வரை குறைய வாய்ப்புள்ளது. இத்தகைய குளிரில் வெறும் தோலில் காற்று பட்டால் 10 முதல் 20 நிமிடங்களில் ‘பனிப்புண்’ (Frostbite) ஏற்பட வாய்ப்புள்ளது.
நியூயோர்க், பொஸ்டன், மெய்ன் (Maine), நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் வெர்மான்ட் ஆகிய மாகாணங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. குளிரோடு சேர்ந்து பலத்த காற்றும் வீசுவதால் மின்சாரம் தடைபடுதல் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படலாம். குடிநீர் குழாய்கள் உறைந்து வெடிப்பதைத் தடுக்க, தண்ணீரைச் சிறு துளிகளாக வடிய விடவும் என எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆர்க்டிக் பகுதியில் நிலை கொண்டிருக்கும் அதீத குளிர்க்காற்று, வளிமண்டல அழுத்த மாறுபாடுகள் காரணமாக தெற்கு நோக்கி நகர்ந்து அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியை வந்தடைவதே இதற்குக் காரணமாகும்.
இந்த ஆர்க்டிக் குளிர்க்காற்றுடன் வீசும் பலத்த காற்று (மணிக்கு 45-75 மைல் வேகம்), மரங்களை முறித்து மின்சாரக் கம்பிகள் மீது விழச் செய்வதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க், நியூ ஜெர்சி, வட கரோலினா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் பரவலான மின்சாரத் தடைகள் (Power Outages) பதிவாகியுள்ளன. சுமார் 8 இலட்சம் மக்கள் வரை மின்சாரமின்றி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் போன்ற நகரங்களில் மின்சாரத் தேவை மிக அதிகமாக இருப்பதால், மின் விநியோகக் கட்டமைப்பில் (Grid) அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நியூயோர்க் மற்றும் வோஷிங்டன் டிசி உட்பட 16-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் அவசரநிலை (State of Emergency) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சிகாகோ போன்ற முக்கிய நகரங்களில் ஏற்கனவே பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாகாணங்களில் பல மாவட்டப் பாடசாலைகள் திங்கட்கிழமை வரை மூடப்படலாம் அல்லது ‘ ணையவகுப்பு’ (Online Classes) முறைக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகி வருகின்றன. பல நகரங்களில் திட்டமிடப்பட்டிருந்த வெளிப்புறக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
அடுத்த 2-3 நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
Tag Words: #ArcticBlast #NortheastWeather #WindChill #WinterStorm #USWeather #PolarVortex #SafetyAlert #February2026

