பிரித்தானியாவின் ஆகப்பெரிய பறவை இனமான வெள்ளை வால் கழுகு (White-tailed Eagle) மீண்டும் கடலோரப் பகுதிகளுக்குத் திரும்புவது குறித்து மீனவர்கள் மற்றும் வாழ்வாதாரத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 8 அடி (2.4 மீட்டர்) இறக்கை விரிப்பு கொண்ட இந்த பிரம்மாண்டமான கழுகுகள், ஒரு காலத்தில் பிரித்தானியாவில் முற்றாக அழிந்து போயிருந்தன. தற்போது இவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு (Reintroduction) வருவதே இந்த கவலைக்கு காரணமாகும்.
இந்தக் கழுகுகள் கடலோரப் பகுதிகளில் உள்ள விலையுயர்ந்த மீன் வகைகளை வேட்டையாடுவதால், தங்களது மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என மீனவர்கள் அஞ்சுகின்றனர். அத்துடன் செம்மறி ஆட்டுக்குட்டிகள் (Lambs) மற்றும் கோழிகளை இந்தக் கழுகுகள் தூக்கிச் செல்வதாக ஸ்கொட்லாந்து போன்ற பகுதிகளில் புகார்கள் எழுந்துள்ளன. ஒரு வேட்டை விலங்கு மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்போது, அது உள்ளூர் உணவுச் சங்கிலியைப் பாதிக்கும் என்பது அவர்களின் வாதமாகும்.
இந்தக் கழுகுகள் இறந்த விலங்குகளை உண்பதன் மூலம் (Scavenging) சூழலைத் தூய்மையாக வைத்திருக்க உதவுவதுடன் அது ஒரு இயற்கை அரண் என பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனா்.
மேலும் இந்தப் பிரம்மாண்ட பறவைகளைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளால் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர். உயிரியல் பன்முகத்தன்மையைப் பேண இத்தகைய இனங்களைப் பாதுகாப்பது அவசியம் எனச் சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.
Tag Words: #WhiteTailedEagle #UKWildlife #FishingIndustry #NatureConservation #SeaEagle #BritainNews #WildlifeConflict #LKA

