வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பாதையில் ஒரு முக்கியமான கொள்கை மாற்றத்தை ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்துள்ளார். நேற்றைய தினம் (பெப்ரவரி 9, 2026) நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், வெறும் பௌதிகக் கட்டுமானங்களைத் தாண்டி “மக்களின் வாழ்வாதாரம்” மற்றும் “பொருளாதார வளர்ச்சி” என்பவற்றுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மாகாண பிரதம செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை ஆளுநர் வழங்கினார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்காக விசேட நிதி ஒதுக்கீடுகளைச் செய்யத் தீர்மானித்துள்ளதாகவும், அந்த வாய்ப்பை மாகாணம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மாகாண சபையிடம் ஏற்கனவே உள்ள 32 பாரிய அபிவிருத்தித் திட்டங்களை தற்போதைய தேவைக்கேற்ப மீள் பரிசீலனை (Review) செய்து சமர்ப்பிக்கவும் அவா் உத்தரவிட்டுள்ளார்.
மாகாணத்தின் பொருளாதாரத்தை நேரடியாக உயர்த்தும் திட்டங்களாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு (Employment) உருவாக்கம், பயன்படுத்தப்படாத இயற்கை வளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துதல், மாவட்ட ரீதியான மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றினைக் குறிப்பிட்டாா்.
“வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.” என்பது ஆளுநரின் தாரக மந்திரமாக காணப்பட்டது.
இந்த அறிவிப்பு, மாகாணத்தில் வீண் கட்டுமானச் செலவுகளைக் குறைத்து, மக்களின் நேரடி வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tag Words: #NorthernProvince #GovernorVethanayahan #LivelihoodFirst #JaffnaDevelopment #EconomicGrowth2026 #AnuraKumara #NPCA #LKA

