யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் 17 வயது சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தனது விசாரணைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடம் மற்றும் வாகனத்தின் நிலை ஆகியவற்றை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் அந்தப் பகுதியில் கடமையில் இருந்தவர்களிடம் ஆரம்பகட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமும், உயிரிழந்த சிறுவன் அல்பினோ அருள் பயாஸின் உறவினர்களிடமும் விரிவான வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
உயிரிழந்த சிறுவனின் நெற்றியில் தோட்டா பாய்ந்திருப்பதாக உடற்கூற்று ஆய்வில் தெரியவந்துள்ள நிலையில், இது திட்டமிட்ட கொலையா அல்லது தற்காப்பு நடவடிக்கையா என்பது குறித்து ஆணைக்குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இந்தச் சம்பவம் இலங்கையின் மனித உரிமை வரலாற்றில் மீண்டுமொரு கறையாகப் பார்க்கப்படுகிறது. காவல்துறையினா் ஒரு வாகனத்தை நிறுத்த முற்படும்போது, வாகனத்தின் டயர்களை இலக்கு வைக்காமல் பயணிகளின் தலையை இலக்கு வைத்துச் சுடுவது “அதிகார துஷ்பிரயோகம்” என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த அறிக்கை, நீதிமன்ற விசாரணைகளில் ஒரு முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tag Words: #HRCSL #JusticeForJaffna #AllaipittiShooting #HumanRightsSri Lanka #JaffnaNews2026 #PoliceAccountability #LKA

