Home இந்தியா📜 இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை : முதலமைச்சர்  பிரதமருக்கு  கடிதம்

📜 இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை : முதலமைச்சர்  பிரதமருக்கு  கடிதம்

by admin

தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குதல், நீண்டகால விசா வழங்குதல் மற்றும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு முக்கியமான கடிதத்தை அனுப்பியுள்ளார்.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களின் மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் நாட்டு நலன் சார்ந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை இக்கடிதம் வலியுறுத்துகிறது. 1983 இனக்கலவரத்திற்குப் பிறகு, உயிரைக் காக்க இலங்கைத் தமிழர்கள் வெளியேறியபோது, ஒன்றிய அரசின் ஆதரவுடன் தமிழ்நாடு அரசு அவர்களுக்குத் தங்குமிடம், வாழ்வாதாரம், கல்வி, மருத்துவ வசதிகள் வழங்கி வருவதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் வசித்து வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிப்பவர்கள், மற்றும் சுமார் 40% இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள்.இத்தனை ஆண்டுகளாகத் தமிழ் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்ந்த போதிலும், குடியுரிமை அல்லது நீண்டகால விசா போன்ற நிரந்தர சட்டப்பூர்வமான தீர்வுகள் இவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் முக்கியப் பரிந்துரைகளை முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.30.06.1987-க்கு முன்னதாக இந்தியாவில் பிறந்தவர்கள், இந்தியரைத் திருமணம் செய்தவர்கள், இந்திய வம்சாவளிப் பின்னணியை உடையவர்கள் போன்ற பல பிரிவினரை தற்போதுள்ள சட்டவிதிகளின் கீழ் முறைப்படுத்தி குடியுரிமை வழங்க வேண்டும்.

2003-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், இலங்கைத் தமிழர்களை “சட்டவிரோதமாகக் குடியேறியவர்” எனக் கருதுவது, இவர்களின் மனிதாபிமான நிலைப்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 1986-ஆம் ஆண்டு நிர்வாக அறிவுறுத்தல்கள், குடியுரிமை விண்ணப்பங்களைக் கருத்தில் கொள்வதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.

முதலமைச்சரின் முக்கிய கோரிக்கைகளாக * குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிக்கத் தடையாக  உள்ள

முந்தைய நிர்வாக உத்தரவை ரத்து செய்ய வேண்டும், * குடியுரிமை அல்லது நீண்டகால விசா விண்ணப்பங்களுக்கு, இலங்கைத் தமிழர்கள் விண்ணப்பிக்கும்போது தற்போதைய கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும்,  மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளுக்கு (மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்) குடியுரிமை மற்றும் நீண்டகால விசா விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க **உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும்,  ஜனவரி 9, 2015 வரை இந்தியாவில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்களை “சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக்” கருதக்கூடாது என்ற விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பனவாகும்

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் மரியாதையுடனும், ஒழுக்கத்துடனும் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களைத் தொடர்ந்து “சட்டவிரோதம்” என வரையறுப்பது, அவர்கள் இந்தியாவிற்கு வந்த மனிதாபிமானச் சூழலையோ அல்லது அரசின் அனுமதியுடன் தங்கியிருப்பதையோ பிரதிபலிக்கவில்லை என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் மீது விரைவான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நல்ல முடிவை எடுப்பீர்கள் என நம்புவதாகவும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

Tag Words:
#SriLankanTamils #CitizenshipRights #TamilNaduGovernment #MKStalin #NarendraModi #RefugeeCrisis #HumanitarianIssue #LKA #IndiaSriLanka

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More