349
ஒரு பெண்ணாக ஏதேனும் ஒரு வகையில் ஒரு நாளில் ஒரு கணப்பொழுதேனும் உங்கள் வாழ்வில் வன்முறை என்பது கட்டவிழ்க்கப்படாமல் இருந்திருந்தால் ஆச்சரியமே! றிஹானா நௌபர்!
குறைந்த பட்சம் ஒரு ஏளனப் பார்வையால் கூட அது நடக்காமல் இல்லை.
“பெண்கள் அதிகம் இருந்தால் நிர்வாகம் செய்வது இலகு. சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்வார்கள்.”
“ தத்துவக் கருத்துக்கள் நிறைந்த ஆண்களுக்குக் கூட புரியாத பெண்களின் உடல் வலிகள்”
“என் உணர்வுகளையும் வலிகளையும் பேசினால் கூட பெண்ணியம் என பச்சை குத்துபவர்கள்”
இவற்றை விட கடந்து செல்ல மிகவும் கடினமாக இருப்பது பெண்ணாக இருந்து கொண்டே பெண் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத பெண்களுடன் பயணிப்பது.
மிக அண்மையில் ஒரு பெண் தோழி என்னிடம் கூறினாள். “ எனக்கு அதிகம் தூங்குவதற்கு விருப்பம் இல்லை. ஆனாலும் இப்போது அதிகம் தூங்குகின்றேன். அந்த கனவுகள் எனக்கானது. யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.எனக்கான உலகில் அங்கு மட்டும் தான் வாழ முடிகின்றது”
தூங்கும் உலகில் மட்டுமல்ல..தான் வாழும் வீட்டில்..வேலைத் தளங்களில்..பொது இடங்களில் வன்முறையற்ற வாழ்தலை உறுதி செய்ய வேண்டும் இல்லையா????
அன்பும் ததும்பும் ஒரு சொல்லை ஒரு பார்வையை இருவருக்கிடையில் கொண்டாடுவதைத் தாண்டி முழு பெண்களுக்குமான குரல் கொடுக்கும் நாளாக அமைந்தால் எப்படி இருக்கும்?
நேற்றைய நாள் அப்படித்தான் அமைந்திருந்தது.பெண்களுக்கு எதிரான வன்முறையற்ற வாழ்தலை கொண்டாடுவோம்..ஆடுவோம்..பாடுவோம்..என்றதன் அடிப்படையில் இவ்வருட “ஒரு கோடி மக்களின் எழுச்சி” நிகழ்வானது மட்டக்களப்பு பாலமீன்மடு எனும் வாவிகளால் சூழப்பட்ட இயற்கை அழகு நிறைந்த கிராமத்தில் நேற்று இடம்பெற்றது.
இலங்கையின் பத்து மாவட்டங்களில் இருந்து வந்த இருபது பெண் அமைப்புக்கள் மற்றும் மட்டக்களப்பு சமதை பெண் நிலைவாத நண்பிகள் குழு மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டிற்கான நண்பர்கள் குழு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்கள் ஆகியோர் இணைந்து இவ்வருட ஒரு கோடி மக்கள் எழுச்சியினை மட்டக்களப்பில் ஒழுங்குபடுத்தி இருந்தனர்.
பாடல்,ஆடல்,ஆற்றுகைகள், சிறார் நிகழ்வுகள் என கொண்டாட்டத்தினால் நிறைந்த நாளாக நேற்றைய நாள் அமைந்திருந்தது.
ஒவ்வொரு கூடமும் வேறுபட்ட அம்சங்களையும் அதற்கே உரிய தனித்துவமான கருப்பொருட்களையும் கொண்டமைந்திருந்தன.
அனைவருக்கும் சிற்றுண்டிகளைப் பரிமாறியது மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டிற்கான நண்பர்கள் குழு.
இந்நிகழ்வினை முன்னிட்டு வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக்கலைஞர்கள் ‘வன்முறைகளற்ற வாழ்வைத்
கொண்டாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் தமது காண்பியக் கண்காட்சியைக் ‘கூடம், புதிய வீதி மட்டக்களப்பில் மாசி மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை காலை 9.00 – மாலை 6.00 வரை நடாத்துகின்றனர்.
றிஹானா நௌபர்
Spread the love

