Home இலங்கையாழ்.போதனாவிற்குள் வெற்றிலை துப்பினால் கடுமையான நடவடிக்கை – பணிப்பாளர்   எச்சரிக்கை

யாழ்.போதனாவிற்குள் வெற்றிலை துப்பினால் கடுமையான நடவடிக்கை – பணிப்பாளர்   எச்சரிக்கை

by admin

 

 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் வெற்றிலை துப்புவோருக்கு எதிராக  காவல்துறையினா்  ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.  இது குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தரும், மிகுந்த நெரிசல் கொண்ட சுகாதார நிலையமாகும். இவ்வளவு பெரும் மக்கள் வருகையுள்ள சூழலில் வைத்தியசாலையை சுத்தமாகவும் சுகாதாரத் தரநிலைகளுக்கு இணங்கவும் பேணுவது எங்களின் முதன்மை பொறுப்பாகும்.

இத்தகைய நோக்கத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு தொழிலாளர்கள் தினமும் இரவு பகலாக பணியாற்றி, வார்டுகள், நடைபாதைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் மிகுந்த தூய்மையுடன் பராமரித்து வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு சேவையால் வைத்தியசாலை சுத்தமான சூழலை நிலைநிறுத்தி வருகிறது.

ஆயினும், சிலர் வெற்றிலைப் பயன்படுத்தி எச்சில் துப்புவதன் மூலம் வைத்தியசாலை வளாகத்தில் அசுத்தமும் அசௌகரியமும் ஏற்படுகிறது. இது சுகாதாரத் தரநிலைகளுக்கு முரணானதோடு, நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

அரசாங்கத்தின் பொது இடங்களை பாதுகாக்கும் விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, வைத்தியசாலை வளாகத்தில் வெற்றிலைப் பயன்படுத்துதல் மற்றும் எச்சில் துப்புதல் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பல அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைத்தியசாலை முழுவதும் பதியப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களில் இத்தடை மீறப்படின், சம்பந்தப்பட்டவர்கள்  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்காக அனுப்பப்படுவார்கள் என்பதை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இந்த வைத்தியசாலை உங்கள் அனைவரின் வைத்தியசாலையாகும். அதனை சுத்தமாகவும் சுகாதாரமான சூழலுடனும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். எனவே, இத்தகைய செயல்களில் இருந்து முழுமையாக விலகி, சுத்தம் மற்றும் ஒழுங்கை பேணுவதில் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#JaffnaHospital #DrSathiyamoorthy #HygieneFirst #HealthAlert #NoSpitting #JaffnaPolice #LKA #PublicHealth2026
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More