Home இலங்கைபோக்குவரத்து மானிய திட்டங்களுக்கு 4,000 மில்லியன் ஒதுக்கீடு

போக்குவரத்து மானிய திட்டங்களுக்கு 4,000 மில்லியன் ஒதுக்கீடு

by admin

 

வட மாகாணத்தில் நிலவும் போக்குவரத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் அரசாங்கம் 4,000 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாக மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போக்குவரத்து மானியத் திட்டங்கள் மற்றும் ஏனைய ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கும் பங்குதாரர்களுக்கும் தெளிவுபடுத்துவதே இந்த நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.

  இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், “வட மாகாணத்தைப் பொறுத்தவரை தற்போது தரமான மற்றும் வசதிகள் கொண்ட பேருந்து தரிப்பிடங்கள் இல்லை என்பது கசப்பான உண்மையாகும். போக்குவரத்து என்பது ஒரு நாட்டின் அத்தியாவசியச் சேவை. இச்சேவை ஏதேனும் ஒரு காரணத்தினால் ஸ்தம்பிதமடைந்தால், அது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும்,” எனச் சுட்டிக்காட்டினார்.

 தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வழங்கும் மானியத் திட்டங்களை வட மாகாண மக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினர் பெற்றுக்கொள்வது ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, தகுதியான அனைவரும் அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான விழிப்புணர்வு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 அரசாங்கம் ஒதுக்கியுள்ள 4,000 மில்லியன் ரூபாய் நிதியுதவியானது, வடக்கின் போக்குவரத்து கட்டமைப்பை நவீனமயப்படுத்தவும், புதிய போக்குவரத்து மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளது. “இந்தத் திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகள் எமது எதிர்கால சந்ததியினருக்குப் பயனுள்ள வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் இலக்கு,” என அவர் மேலும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள், மாவட்ட செயலகப் பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து சங்கங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 #Jaffna #NorthernProvince #TransportDevelopment #SriLankaNews #Infrastructure

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More