259
இஸ்ரேலிய ஊடகமான Yedioth Ahronoth (Ynet) வெளியிட்டுள்ள செய்தியின்படி, வாஷிங்டன் தரப்பிலிருந்து இத்தாலி ஊடாக ஈரானுக்கு ஒரு முக்கிய தூது அனுப்பப்பட்டுள்ளது. அதில், “இன்று அல்லது நாளைக்குள்” போரை நிறுத்திவிட்டு, மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு கோரப்பட்டதாகத் தெரிகிறது.
இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தஜானி (Antonio Tajani), அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மத்தியஸ்தம் மற்றும் பதற்றத்தைத் தணிக்க இத்தாலி ஆதரவளிப்பதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தெஹ்ரானில் உள்ள இத்தாலிய தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டு, அதன் பணியாளர்கள் அஜர்பைஜானுக்கு மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பெப்ரவரி மாத இறுதியில் மோதல் தீவிரமடைந்ததில் இருந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அடுத்தது என்ன?
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இத்தாலி வழியாக அமெரிக்க அதிகாரிகள் முன்வைத்த உடனடி போர்நிறுத்தக் கோரிக்கையை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்த நான்கு முதல் ஐந்து நாட்கள் வரையிலான குறுகிய கால போர்நிறுத்தத் திட்டத்தை ஈரான் “முற்றாக நிராகரித்துள்ளது”. தற்போதைய நிலையில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், இராணுவ ரீதியான பதிலடிகளே தொடரும் என்றும் ஈரான் சமிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு, ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன.
மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஊடான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் சர்வதேச சந்தையில் எரிசக்தி விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் போர்நிறுத்தத்தை நிராகரித்துள்ளதால், வரும் நாட்களில் மோதல் மேலும் தீவிரமடையக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மறைமுக வழிகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மேற்கொண்டாலும், இரு தரப்பும் பின்வாங்கத் தயாராக இல்லாதது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

