324
சர்வதேச நீதிமன்றத்தில் ஜெர்மனிக்கு எதிராக நிக்கராகுவா (Nicaragua) தொடுத்துள்ள தனிப்பட்ட வழக்கே இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக ஆதரவு வழங்குவதன் மூலம் ஜெர்மனி சர்வதேச சட்டங்களை மீறுவதாக நிக்கராகுவா குற்றம் சாட்டியுள்ளது.
காசா இனப்படுகொலை வழக்கில் இஸ்ரேலுக்கு ஆதரவாகத் தனது தரப்பு நியாயங்களை முன்வைப்பதாக முன்னர் வழங்கிய உறுதியிலிருந்து ஜெர்மனி தற்போது பின்வாங்கியுள்ளது. 2024 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டுகளை “அடிப்படையில்லாதவை” என்று நிராகரித்த ஜெர்மனி, தற்போது இந்த நிலைப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீதான வழக்கில் தலையிட்டால், அது நிக்கராகுவா தொடுத்துள்ள வழக்கில் ஜெர்மனியின் தற்காப்பு வாதங்களைப் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி மற்றும் UNRWA-விற்கான நிதி நிறுத்தம் போன்றவற்றால் ஜெர்மனி ஏற்கனவே சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
அத்துடன் காசாவில் நடக்கும் நிகழ்வுகளுக்குத் தானும் ஒரு உடந்தையாகக் கருதப்படுவதைத் தவிர்க்கவே ஜெர்மனி இந்தத் தற்காப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எவ்வாறாயினும், தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஜெர்மனி முழுமையாக ஏற்றுக்கொண்டதாக இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், இஸ்ரேலுக்காக வாதாட முன்வராதது சர்வதேச அரசியலில் ஒரு முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.
Spread the love

