203
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அரியாலை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் தயாளினி திலீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், தனது தாயாரையும் சகோதரியையும் காணவில்லை என விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முடுக்கிவிட்ட காவற்துறையினர், காணாமல் போன விரிவுரையாளரின் மகளும் இளைஞன் ஒருவரும் திருகோணமலை பகுதியில் இருப்பதைக்கண்டு பிடித்தனர். அங்கிருந்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மீட்கப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டமை அம்பலமானது. குறித்த விரிவுரையாளரைத் தான் கொலை செய்து, சடலத்தைத் தனங்கிளப்பு பகுதியில் உள்ள காட்டுக்குள் வீசியதாக அந்த இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், இன்று (மார்ச் 21) சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் விரிவுரையாளரின் சடலத்தை மீட்டுள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணக் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவம் யாழ். கல்விச் சமூகம் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

