180
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற மக்கள் அணிதிரட்டல் படைகளின் (PMF) தலைமையகத்தைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க தூதரக மற்றும் தளவாட மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல்: பாக்தாத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனினும், அந்த இடங்கள் ஏற்கனவே காலியாக இருந்ததால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
யுத்தக் சூழல் காரணமாக ஓமுஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈராக் எண்ணெய் அமைச்சு, வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களில் ‘தவிர்க்க முடியாத சூழல்’ (Force Majeure) நிலையை அறிவித்துள்ளது. நாட்டின் 90 சதவீத வருமானம் எண்ணெயைச் சார்ந்திருப்பதால், இது ஈராக் மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவு பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஓமுஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சீராகாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்குவேன் என எச்சரித்திருந்தார். எனினும், தற்போது அந்தத் தாக்குதல் உத்தரவை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பிராந்தியப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் ஒரு இருவழிப் போர்க்களமாக மாறிவருவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வார இறுதியில் ஈராக் தேசிய புலனாய்வு சேவை தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் காவற்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பெப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த மோதலில், ஈராக்கிற்குள் இருக்கும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது போர் ஹெலிகொப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியதை பென்டகன் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஈராக் தனது எல்லைகளைப் பாதுகாக்கவும், அதே சமயம் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனான உறவைச் சமநிலைப்படுத்தவும் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.
திகதி: 23 மார்ச் 2026
ஆதாரம்: அல் ஜசீரா, ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ்.
Spread the love

