பார்வையில் வித்தியாசங்களும்
செயற்பாடுகளில் விடாமுயற்சி கொண்ட
இளங்கலை ஆளுமை விக்கி.
நவீன ஓவியராகவும்; சிற்பியாகவும்
சிறப்பாகத் தன்னை நிலைநிறுத்தி வருபவர்.
கேலிச்சித்திரக்காரராகவும் தனிச்சிறப்பியல்பை
புலப்படுத்தி நிற்பவர் .
வணிக ஓவிய, சிற்ப கலையாக்கங்களையும்
வாழ்வாதாரத்திற்காக வரித்துக்
கொண்டிருப்பவர்.
அவரது தேடலும் செயற்பாடுகளும்
சமூகப் பொறுப்புணர்வும்; கலைத்திறமும் வலுவாக
வாய்க்கப் பெற்ற ஆளுமையாக உருவெடுப்பதற்கு
வழிவகுப்பதாக இருப்பது முக்கியமானது.
இத்தகைய பின்புலத்தில் கவிஞராகவும்
புதுமுகம் கொள்கிறார். யதார்த்த வெளியையும்;
அதற்கப்பாலான வெளிகளையும்
ஊடறுத்து இயங்கும் கவித்துவமும் அதன்
மொழியும் விக்கிக்கு சித்தித்திருக்கிறது.
மூதாதையர் அதாவது உத்தியாக்கள்
தங்களை ஆற்றுப்படுத்துவதாக நம்பிக்கை
கொண்ட பழங்குடி மக்களின் வாழ்வியலும்
சடங்குகளும் வெளிக்காட்டும் உலகங்களின்
மொழியாக விக்கியின் கவிதைகள்
மிதக்கும் தன்மை கொண்டு இயங்குகின்றன.
வன்முறை நீக்கம் பெற்ற உலகில் எல்லா
உயிர்களும் வாழ்வாங்கு வாழும் உலகு
தழுவிய பழங்குடி மக்களின் எழுச்சி
கொள்ளும் குரல்களுடன் சேர்ந்து
ஒலிப்பவை.
சமூகங்கள் கிளப்புகின்ற சவால்களைத்
தனியாளாகவும் முகம்கொள்ளும் விக்கி,
உயிர்கள் உலகில் மகிழ்ந்து வாழும்
கலையும் வாழ்வும் கொண்டவராக
இருப்பது மகிழ்ச்சிகரமானது.
பேராசிரியர் சி.ஜெயசங்கர்

