Home இலங்கைவெறுப்புப் பேச்சை ரசிக்கும் தமிழர்கள்? நிலாந்தன்!

வெறுப்புப் பேச்சை ரசிக்கும் தமிழர்கள்? நிலாந்தன்!

by admin

கடந்த திங்கட்கிழமை நல்லூரடியில் ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதை ஒழுங்குபடுத்தியது “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு” என்ற அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும்.தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக அந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதுதொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தார்கள்.

நல்லூரில் அவர்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் அவர்கள் பொதுவாக அரசியல்வாதிகள் என்று குறிப்பிட்டதற்கு பதிலாக அர்ஜுனா என்று சுட்டிப்பாகக் குறிப்பிட்டிருந்திருக்க வேண்டும் என்று ஒருபகுதி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கருதுவதாகத் தெரிகிறது.

ஆனால் தாங்கள் அர்ஜுனாவை மட்டும் அவ்வாறு குற்றம் சாட்டவில்லை என்றும் தமிழ்த் தேசியப் பரப்பில் வேறு அரசியல்வாதிகளும் அவ்வாறு வெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்திருக்கிறார்கள் என்றும் அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றார்கள்.

அதில் உண்மை உண்டு.வெறுப்புப் பேச்சு அர்ஜுனாவில் இருந்து தொடங்கவில்லை.அவருக்கு முன்னரே அது இருந்தது.தமிழ்த் தேசிய அரசியலில் வெறுப்பர்கள் எப்பொழுதும் இருந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலின் ஜனநாயக இதயம் நோய் வாய்ப்படும்போது,தமிழ்த் தேசிய அரசியலில் பகை முரண்பாடு எது? நேசமுரண்பாடு எது? என்பதை பிரித்தறியத் தேவையான முதிர்ச்சியும் பண்பாடும் குறையும்போது வெறுப்பர்கள் வேட்டைப் பற்கள் துருத்திக் கொண்டு தெரிய மேலெழுகிறார்கள்.

நல்லூரில் நடந்த அந்தப் போராட்டத்தின் பின் ஏறக்குறைய அதே காலப்பகுதியில்,வெவ்வேறு அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் இணைந்து அர்ஜுனாவுக்கு எதிராக  குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒரு முறைப்பாட்டை செய்து இருக்கிறார்கள். அண்மையில் அர்ஜுனா கிளிநொச்சி மக்களுக்கு எதிராகவும் மலையக மக்களுக்கு எதிராகவும் தெரிவித்த கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளின் கீழ் அர்ஜுனா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது வேறு.ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர் குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக அல்லது நபர்களுக்கு எதிராக அல்லது அமைப்புகளுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்துக்களை சட்ட ரீதியாகக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று அவர்கள் கருத்துவதாகத் தெரிகிறது.

தமிழ்த் தேசியப் பரப்பில்,கட்சிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த அதே கட்சிக்காரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் தொடங்கி இப்பொழுது வெறுப்பைக் கக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறதா? உள்நாட்டு நீதி போதாது என்று கூறி அனைத்துலக விசாரணையைக் கோரி நிற்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்கு போடும் நிலைமை அதிகரித்து வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களைச் சேர்ந்த அன்னையர்கள் சில ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கிடையே மோதிக்கொண்ட போது போலீசுக்குப் போய் முறைப்பாடு செய்தார்கள். பின்னர் ஒரே கட்சிக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குப் போடும் நிலைமை வந்தது. அது அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தன் சொந்தக் கட்சிக்காரருக்கு எதிராகவே வழக்குப் போடும் ஒரு நிலையை அடைந்து விட்டது.இப்பொழுது வெறுப்புப் பேச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படுகிறது. தமிழ்த் தேசிய அரசியல் எதை நோக்கிப் போகிறது?

அதேசமயம் வெறுப்புப் பேச்சுக்கு எதிராகவும் அரசியல் அவதூறுகளுக்கு எதிராகவும் மேற்கண்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட அதே காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ஜுனாவும் கஜேந்திரனும் மோதியிருக்கிறார்கள்.

அது ஒரு தரக்குறைவான,அருவருப்பான மோதல். மோதலின் ஒரு கட்டத்தில் அர்ஜுனா,கஜேந்திரனை நோக்கித் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு சபையில் அமர்ந்திருந்த ஒரு பகுதியினர் கைதட்டுகிறார்கள். அவ்வாறு கைதட்டியவர்கள் அரசாங்கக் கட்சியை சேர்ந்தவர்கள் என்று ஓர் ஊடகவியலாளர் கூறினார். தமிழ் அரசியல்வாதிகள் எதை ரசிக்கிறார்கள் ? எதற்குக் கைதட்டுகிறார்கள்?

தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல,சமூக வலைத்தளங்களில் அதிகமாக மினக்கெடும் தமிழ் மக்களில் கணிசமான தொகையினர் அல்லது அதிகளவு தொகையினர் எதை ரசிக்கிறார்கள்? எதை ஆர்வத்தோடு  பார்க்கிறார்கள்?

மேற்கண்ட வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும்  முறைப்பாடுகளோடு சம்பந்தப்பட்ட  காணொளிகளோடு ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் காணொளிதான் அதிகமாகப் பகிரப்பட்டது;அதிகமாக பார்க்கப்பட்டது. வெறுப்புப் பேச்சு மற்றும் அரசியல் அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விடவும் வெறுப்பு பேச்சுகளையும் ஒருவர் மற்றவரை கீழ்மைப்படுத்தும் அருவருப்பான மோதல்களையும் ரசிக்கும் அளவுக்கு தமிழ்ப் பொதுப் புத்தி விகாரமடைந்து வருகிறதா?

கடந்த பெப்ரவரி மாதம் ஒஸ்ரேலியாவில் வசிக்கும் ஒரு மருத்துவர் முகநூலில் ஒரு குறிப்புப் போட்டிருந்தார்.அக்குறிப்பில் அவர் கனடாவில் வசிக்கும் தமிழ் அரசியல் விமர்சகர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய விடயத்தை  ஆங்கிலத்திலும் தமிழில் மொழிபெயர்த்தும்  பகிர்ந்திருந்தார்.மேற்படி கனடாவில் வசிக்கும் அரசியல் விமர்சகர் அர்ஜுனாவை ஏன் தான் ஆதரிக்கிறார் என்பதற்கு பின்வருமாறு விளக்கம்  அளித்திருந்தார்… “ராமநாதன் அர்ஜூனா எம்.பி.யை நான் மதிக்கிறேன்.காரணங்கள்: 1) அவர் தமிழ்த் தேசியவாதத்தை நகைச்சுவைப் பொருளாக்கினார், 2) அவர் நாடாளுமன்றத்தை சாதாரணமான அவையாக்கினார், 3) மருத்துவத் தொழிலை வேறு எந்தத் தொழிலையும் போல சாதாரண தொழிலாக எளிமைப்படுத்தினார் – யாழ்ப்பாணத்தில் அது உயர்ந்த தொழில் என நினைக்கும் இடத்தில் இது குறிப்பிடத்தக்க சாதனை, 4) அவர் அரசியலை சாதாரண மனிதனின் நிலையில் அணுகினார்.வக்கீல்களுக்கு மட்டும் பாராளமன்றம்  என்பதை நாளை ஒரு விவசாயியால் பாராளுமன்றத்தில்  பேசமுடியும் என்பதை உறுதிபடுத்தினார்…..”

மேற்கண்ட முகநூல் குறிப்பின் மீது பலரும் பலவிதமாக பதில்வினை ஆற்றியிருந்தார்கள். அதைத் தனியாகத் தொகுத்துப் பார்க்க வேண்டும். ஆனால் மேற்படி முகநூல் குறிப்பு எழுதிய அந்த மருத்துவர்,சில நாட்கள் கழித்து எழுதிய ஒரு முகநூல் குறிப்பில், ஒரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். தான் வழமையாக எழுதும் பதிவுகளை நுகர்பவர்களின் எண்ணிக்கை 500 ஐக் கடப்பதில்லை என்றும் ஆனால் அர்ஜுனாவைப் பற்றிய தன்னுடைய பதிவை நுகர்ந்தவர்கள் 35,000க்கும் அதிகம் என்று.அதாவது வழமையை விட 70 மடங்கு அதிகம்.

இது எதைக் காட்டுகிறது? ஒன்றில் அவருடைய குறிப்பை சமூக வலைத்தளப் பரப்பில் யாரோ காசு கொடுத்துத் திட்டமிட்டுப் பரவலாக்குகிறார்கள்.அல்லது அதுபோன்ற குறிப்புகளை ரசிப்பவர்களின் அல்லது நுகர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று பொருள்.

இது தமிழ்க் கூட்டு உளவியல் தொடர்பான,தமிழ்ப் பொதுப் புத்தி தொடர்பான ஒரு பண்பாட்டுப் பிரச்சினை. இதனை சட்டரீதியாக மட்டும் அணுக முடியாது தீர்க்கவும் முடியாது. இதற்கு ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி தேவை. சீரழிந்து வரும் தமிழ்த் தேசிய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சும் விதத்தில் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி தேவை. அது ஒரு கூட்டு முயற்சி. அது ஒரு கூட்டு உழைப்பு. அது ஒரு கூட்டுச் சிகிச்சை.

ஒரு சமூகத்தில் கூட்டு முயற்சிகள் பெரும்பாலும் அரசியல் தளத்தில்தான் சாத்தியம். அதாவது அரசியல் தலைமைதான் இதுபோன்ற கூட்டு முயற்சிகளில் வெவ்வேறு தரப்புகளைய ஒரு மையத்தில் ஒன்றிணைக்க முடியும். ஆனால் துயரம் என்னவென்றால்,தமிழில் அதே அரசியல் தரப்புகள்தான் இந்தச் சீரழிந்த பண்பாட்டை உற்பத்தி செய்கின்றன,ஊக்குவிக்கின்றன, காசு கொடுத்து வளர்த்து விடுகின்றன.அவர்கள் பெற்றெடுத்த ஒன்றை,அவர்களே காசு கொடுத்து,அணி திரட்டி வளர்த்துவிட்ட குருட்டு விசுவாசத்தை,அழிப்பதற்கு அவர்களாக முன்வருவார்களா?

ஆனால் அப்படி ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்படவில்லையென்றால் தமிழ்ச்  சமூகம் அவிழ்த்துவிட்ட பாக்கு முட்டைபோல சிதறிப் போய்விடும்.அதன் பின் தாயகம்,தேசம்,சுயநிர்ணயம் என்றெல்லாம் பொய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More