145
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் நெகேவ் (Negev) பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள டிமோனா நகரை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. மார்ச் 21 அன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், இஸ்ரேலின் அணுசக்தி உள்கட்டமைப்பிற்கு மிக அருகில் நிகழ்ந்திருப்பதால் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
1955 இல் நிறுவப்பட்ட டிமோனா நகரம், இஸ்ரேலின் அணு ஆயுதத் திட்டத்தின் மையப்புள்ளியாகக் கருதப்படுகிறது. பிரான்ஸின் உதவியுடன் 1960களில் செயல்பாட்டுக்கு வந்த இந்த அணு உலை, இஸ்ரேலின் பாதுகாப்புக் கொள்கையில் “சாம்சன் ஒப்ஷன்” (Samson Option) எனப்படும் இறுதி தற்காப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாகப் பார்க்கப்படுகிறது. இத்தாக்குதலுக்கு முன்னதாக ஈரானின் நடான்ஸ் (Natanz) அணு உலை மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், அதற்குப் பதிலடியாகவே ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அரசியல் ஆய்வாளர் முகமது முஸ்தபா ஷாஹின் கருத்துப்படி, டிமோனா அமைந்துள்ள இந்தப் பகுதி வரலாற்று ரீதியாக பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய பெடூயின் (Palestinian Bedouin) பழங்குடியினர் வாழ்ந்த இடமாகும். மேலும், இப்பகுதியில் உள்ள பாஸ்பேட் படிவுகளில் யுரேனியம் தாதுக்கள் செறிந்து காணப்படுவது இஸ்ரேலின் அணுசக்தி வளர்ச்சிக்குச் சாதகமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இந்தப் பகுதியில் கதிர்வீச்சு அபாயம் எதுவும் தற்போது இல்லை எனத் தெரிவித்திருந்தாலும், அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் நிகழும் இத்தகையத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் ஒரு பெரும் பேரழிவிற்கு வழிவகுக்கலாம் என உலக நாடுகள் எச்சரித்துள்ளன.
Spread the love

