அமெரிக்க ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31, 2026 அன்று மாலை, பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள Saadoun Street இல் வைத்து இவர் கடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘Al-Monitor’ உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் பணியாற்றி, ஈராக் மற்றும் சிரியா தொடர்பான விடயங்களை நீண்டகாலமாக செய்தியளித்து வந்த அனுபவமிக்க ஊடகவியலாளராவார்.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பின்தொடர்ந்த ஈராக் பாதுகாப்புப் படையினர், அது விபத்துக்குள்ளான நிலையில் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். எனினும், கிட்டில்சன் பின்னர் மற்றொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டு கடத்தல்காரர்களால் தப்பிச் செல்லப்பட்டுள்ளார். அவர் பாக்தாத்தின் தெற்குப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், கிட்டில்சனுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ‘Kata’ib Hezbollah’ ஆயுதக் குழுவால் அச்சுறுத்தல் இருந்ததாகவும், இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் முன்பே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஈராக்கில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவது குறைந்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, ஈராக் பாதுகாப்புப் படையினரும் அமெரிக்கத் தூதரகமும் இணைந்து அவரை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன், 2023ஆம் ஆண்டு கடத்தப்பட்ட ஆய்வாளர் Elizabeth Tsurkov சுமார் 900 நாட்களுக்கு பின்னர் 2025 செப்டம்பரில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#Shelly Kittleson #Baghdad #Journalist Kidnapping #AmericanJournalist

