ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E Strike Eagle போர் விமானத்தில் பயணித்திருந்த விமானி மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், காயமடைந்திருந்த விமானி தற்போது பாதுகாப்பாக இருப்பதுடன் விரைவில் குணமடைவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது பறந்துக் கொண்டிருந்த போது அந்த போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது. மீட்பு நடவடிக்கையின் போது அமெரிக்க படைகள் மற்றும் எதிர்ப்படைகளிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் நடைபெற்றன. பல விமானங்கள் மற்றும் இராணுவப்படைகள் இதில் ஈடுபடுத்தப்பட்டு விமானியின் இருப்பிடம் கண்காணிக்கப்பட்டது.
“எதிரி நாட்டின் விமானியை” பிடித்து ஒப்படைப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பெப்ரவரி இறுதியில் தொடங்கிய மோதலுக்குப் பிறகு ஈரான் மண்ணில் விழுந்த முதல் அமெரிக்க விமானம் இதுவாகும். அதேவேளை, இதற்கு முன் மேலும் இரண்டு அமெரிக்க விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.

