Home உலகம்ஹார்முஸ் நீரிணையில் ஈரான் அதிரடி: இரண்டு சரக்குக் கப்பல்கள் சிறைபிடிப்பு!

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் அதிரடி: இரண்டு சரக்குக் கப்பல்கள் சிறைபிடிப்பு!

by admin
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) தனது கட்டுப்பாட்டை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர் நிறுத்தத்தை கால வரையறையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரானியப் படைகள் லிபீரியக் கொடியுடன் பயணித்த ‘எபாமினோண்டாஸ்’ (Epaminondas) மற்றும் பனாமா கொடியுடன் பயணித்த ‘எம்.எஸ்.சி பிரான்செஸ்கா’ (MSC Francesca) ஆகிய இரண்டு வணிகக் கப்பல்களை ஹார்முஸ் நீரிணையில் வைத்து அதிரடியாகக் கைப்பற்றின.
இவ்விரு கப்பல்களும் தற்போது ஈரானியத் துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும், அங்கிருந்து தப்பிக்க முயன்ற மூன்றாவது கப்பல் ஒன்றின் மீது ஈரானியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன. எனினும், அக்கப்பல் சேதமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தை சென்றடைந்தது.
முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி பயணித்ததாலும், கப்பலின் திசைகாட்டி அமைப்புகளில் (Navigation Systems) மாற்றங்களைச் செய்ததாலும் சட்ட அமலாக்க நடவடிக்கையாகவே இவை சிறைபிடிக்கப்பட்டதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அமெரிக்காவின் கடல்வழி முற்றுகைக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
உலக கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கு பயணிக்கும் இந்த நீரிணைப்பகுதி முடக்கப்பட்டால், அது உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த இழுபறி நிலையால் எரிபொருள் விலையேற்றம் குறித்த அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More