115
தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கைத் தமிழர்கள் மூவர், மீண்டும் சட்டவிரோத முறையில் கடல் வழியாக இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 300க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாகத் தனுஷ்கோடிக்கு சென்று, தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். இவர்கள் அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது இலங்கையில் பொருளாதாரச் சூழல் சீரடைந்து வருவதால், தங்களை மீண்டும் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இவர்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். இருப்பினும், இவர்கள் சட்டவிரோத முறையில் இந்தியாவிற்குள் நுழைந்ததால், சட்ட ரீதியான நடைமுறைகளில் சிக்கல் ஏற்பட்டு தாயகம் திரும்புவதில் தாமதம் நிலவி வருகிறது.
இந்தச் சூழலில், நேற்று மாலை (ஏப்ரல் 27) மண்டபம் தெற்கு கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த மூவரை கியூ பிரிவு காவற்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் (48), அவரது மனைவி ராஜினி (47) மற்றும் மகள் திபேந்தினி (20) என்பது தெரியவந்தது. இவர்கள் படகு மூலம் இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்றதை ஒப்புக்கொண்டனர்.
இவர்களுக்கு உதவியாக டீசல் மற்றும் பைகளுடன் இருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த மூவர் உட்பட மொத்தம் ஆறு பேரை கியூ பிரிவு காவற்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Spread the love

