237
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட ஏ.ஜி. பேரறிவாளன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சபையில் (Bar Council) வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட வழக்கறிஞருமான ஆர். சுதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில், பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 27, 2026 அன்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் சேர்க்கை விழாவில், பேரறிவாளன் முறைப்படி கறுப்பு அங்கி அணிந்து வழக்கறிஞராகத் தன்னை இணைத்துக்கொண்டார். “நீதித்துறை வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம்” என்று விமர்சித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, பயங்கரவாதக் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட ஒருவர் சட்டத் துறையில் நுழைவது அந்தத் தொழிலின் கண்ணியத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 24A-இன் படி, தண்டனை பெற்ற ஒருவர் விடுதலையாகி இரண்டு ஆண்டுகள் வரை பதிவு செய்ய முடியாது என்ற விதியை மட்டும் பார்க்காமல், குற்றத்தின் தீவிரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
1991ஆம் ஆண்டு இடம்பெற்ற ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்த பேரறிவாளன், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் இந்திய உச்ச நீதிமன்றத்தால் தனது சிறப்பு அதிகாரத்தைப் (Article 142) பயன்படுத்தி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையிலிருந்தபடியே தனது கல்வியைத் தொடர்ந்த பேரறிவாளன், அண்மையில் சட்டப் படிப்பை முடித்து அகில இந்திய பார் தேர்விலும் (AIBE) தேர்ச்சி பெற்றிருந்தார். கைதிகளுக்கான சட்ட உதவி மற்றும் மனித உரிமைகள் சார்ந்து பணியாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவரது வழக்கறிஞர் பதிவுக்கு எதிராக இந்தச் சட்டப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Spread the love

