செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட மேலும் இரு என்புக்கூடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 8-ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது இந்த முக்கிய தடயங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வுப் பணியின் போது மொத்தம் 5 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட தொகுதிகளில் இருந்து ஒரு குழந்தையின் என்புக்கூடு மற்றும் மற்றொரு என்புக்கூடு என இரண்டு தொகுதிகள் வெளியே எடுக்கப்பட்டன. சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட குழந்தையின் என்புக்கூட்டைப் பாதுகாக்க, அதனை பண்டேஜ் துணிகளால் சுற்றி மண்ணுடன் சேர்த்து அகழ்ந்து எடுத்ததாக சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.
என்புக்கூடுகளுடன் சேர்த்து தங்கம் என சந்தேகிக்கப்படும் சிறிய ஆபரணம் மற்றும் உடைந்த நிலையில் ஒரு மூக்குத்தி, பண்டைய நாணயக் குற்றிகள், கறுப்பு நிற மண்ணுக்குள் எரிந்த நிலையில் காணப்பட்ட சில எலும்புத் துண்டுகள், சிதைவடைந்த நிலையில் ஒரு மரப்பெட்டி மற்றும் ஆணிகள் என்பன பொருட்கள் சான்றுகளாகக் கைப்பற்றப்பட்டுள்ளன:
செம்மணி பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் மொத்தம் 255 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 249 என்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக நீதித்துறை மற்றும் தடயவியல் பரிசோதனைகளுக்காகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
#செம்மணி #யாழ்ப்பாணம் #மனிதபுதைகுழி #அகழ்வாராய்ச்சி #குழந்தையின்என்புக்கூடு #இலங்கை #தடயவியல்ஆதாரம் #தங்கம் #சான்றுபொருட்கள் #semmanimassgrave #Jaffna #excavation

