Home இலங்கையாழ். போதனா தீவிபத்து: தடயவியல் விசாரணை

யாழ். போதனா தீவிபத்து: தடயவியல் விசாரணை

by admin

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்துள்ள நிலையில், அது தொடர்பான தடயவியல் புலனாய்வு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தீ விபத்திற்கான காரணம் மர்மமாக உள்ள நிலையில், இது ஒரு திட்டமிட்ட சதிச் செயலா அல்லது மின்சாரக் கசிவு போன்ற விபத்தா என்பதைக் கண்டறிய விசேட விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 யாழ்ப்பாண மாவட்ட தடயவியல் காவற்துறையினர் (SOCO) இன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, தீப்பற்றிய விதம் மற்றும் எரிந்த பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்து முதற்கட்டத் தடய ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர்.  கொழும்பிலிருந்து அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள (Government Analyst’s Department) அதிகாரிகள் நாளை மறுதினம் (2026 மே 11, திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து விரிவான சோதனைகளை முன்னெடுக்கவுள்ளனர்.


மருந்து களஞ்சியப் பகுதி தற்போது ஒரு “குற்றப்பிரதேசமாக” உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் வந்து சோதனையிடும் வரை, அங்குள்ள தடயங்கள் சிதையாமல் இருப்பதற்காக அந்தப் பகுதிக்கு 24 மணிநேரக் காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை ஊழியர்கள் அல்லது பொதுமக்கள் எவரும் குறித்த பகுதிக்குள் நுழைவதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் தீ ஏற்படுவது என்பது மிகவும் பாரதூரமான விடயமாகும். குறிப்பாக, நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இவ்வாறான விபத்துக்கள் நிகழ்வது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தீப்பற்றிய போது களஞ்சியத்தில் இருந்த மருந்துகளின் இருப்பு விபரங்கள் மற்றும் அவற்றின் பெறுமதி குறித்து வைத்தியசாலை நிர்வாகம் தனிப்பட்ட ரீதியில் கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது. அரச இரசாயன பகுப்பாய்வாளர்களின் அறிக்கை வெளியான பின்னரே, தீ விபத்தின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை மற்றும் சேத விபரங்கள் முழுமையாகத் தெரியவரும்.

#JaffnaHospital  #FireAccident  #ForensicPolice  #GovernmentAnalyst  #MedicalStore

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More