Home இலங்கையாழ். போதனா வைத்தியசாலை தீ விபத்து: வதந்திகளை நம்ப வேண்டாம் – பணிப்பாளர்

யாழ். போதனா வைத்தியசாலை தீ விபத்து: வதந்திகளை நம்ப வேண்டாம் – பணிப்பாளர்

by admin

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், வைத்தியசாலை சேவைகள் வழமை போல் தடையின்றி நடைபெற்று வருவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி இன்று (2026 மே 12, செவ்வாய்க்கிழமை) தெளிவுபடுத்தியுள்ளார்.  வைத்தியசாலை நிர்வாகம் அனர்த்தம் குறித்து இரண்டு விசேட குழுக்களை அமைத்து விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் போலிச் செய்திகள் குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வைத்தியசாலை நிர்வாகத்தினால் தற்போது இரண்டு மட்டங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன .   வைத்தியசாலைக்கு வெளியேயுள்ள அதிகாரிகளை உள்ளடக்கிய  நிர்வாக விசாரணைக் குழு அனர்த்தம் ஏற்பட்டதற்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்துத் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ள  அதேவேளை   வைத்தியசாலை மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  கணக்கெடுப்புக் குழு   , தீயில் இருந்து மீட்கப்பட்ட மருந்துகளின் இருப்பு (Stock Taking) மற்றும் தீயில் எரிந்த மருந்துகளின் பெறுமதி, களஞ்சியச் சேத விபரங்களைக் கணக்கிடும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடம் தற்போது யாழ்ப்பாணக் காவற்துறையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது.  கொழும்பிலிருந்து நேற்று (திங்கட்கிழமை) வருகை தந்த அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள (Government Analyst’s Department) அதிகாரிகள் தமது ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர்.  புலனாய்வு மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் கிடைத்தவுடன், அவை சுகாதார அமைச்சு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.

  மீண்டும் இவ்வாறான விபத்துக்கள் நிகழாமல் தடுக்க, ஒரு நிரந்தர மற்றும் நவீன மருந்து களஞ்சியசாலையை அமைத்துத் தருமாறு சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் மருந்துகள் இல்லை என்பது போன்ற போலியான செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரியுள்ளார். அனைத்து மருத்துவ சேவைகளும் தற்போது தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரு பொது மருத்துவமனை அனர்த்தத்திற்கு உள்ளாகும் போது, மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தைப் பரப்புவது சமூகப் பொறுப்பற்ற செயலாகும். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நேரடியாகக் களமிறங்கி விளக்கமளித்துள்ளமையானது, நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடையே நிலவிய குழப்பத்தைத் தீர்க்க உதவும். குறிப்பாக, மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் சேவைகள் தடையின்றி நடப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தியிருப்பது நம்பிக்கையளிக்கிறது. புலனாய்வுத் துறையினரும் இரசாயனப் பகுப்பாய்வாளர்களும் இணைந்து விசாரிப்பதால், தீ விபத்தின் உண்மைத்தன்மை மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#JaffnaTeachingHospital  #HospitalDirector #FireInvestigation #StopFakeNews #MedicalSupplies

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More