Home இலங்கைதையிட்டி பவானி வீதி விடுவிப்பு தொடர்பிலான வழக்கு – ஜூன் மாதமே கட்டளை

தையிட்டி பவானி வீதி விடுவிப்பு தொடர்பிலான வழக்கு – ஜூன் மாதமே கட்டளை

by admin

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள வளாகத்தினுள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்கும் நடவடிக்கைக்கு எதிராகப் பலாலி  காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இறுதிச் சட்டக் கட்டளையை, மல்லாகம் நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 25-ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. இன்றைய தினம் (2026 மே 21, வியாழக்கிழமை) இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 11-ஆம் திகதி மன்று திகதியிட்டிருந்த நிலையில், இன்று வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த புதிய திகதி அறிவிக்கப்பட்டது.

தையிட்டி விகாரை வளாகத்திற்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான “பவானி” வீதி அமைந்துள்ளது. இவ்வீதியை மீட்டெடுக்கும் நோக்கில் கடந்த ஏப்ரல் 28-ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வீதி அளவீடு செய்யப்பட்டது.  வீதியை மறித்து விகாரை நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் பிரதேச சபையே அதனை அகற்றி, அதற்கான செலவீனத்தை விகாராதிபதியிடமிருந்து அறவிடும் எனவும் பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

பிரதேச சபை வேலியை அகற்ற முற்படுவதாக விகாராதிபதி செய்த முறைப்பாட்டின் பேரில், பலாலி காவல் நிலையப் பொறுப்பதிகாரி தவிசாளரை அழைத்து, “வேலியை அகற்றினால் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் பாதிக்கப்படும்” என அச்சுறுத்தும் தொனியில் கூறி இப்பணியைக் கைவிடுமாறு கோரினார். எனினும், தவிசாளர் அதற்கு மறுப்புத் தெரிவித்து வீதியை மீட்டே தீருவோம் என்பதில் உறுதியாக இருந்தார்.

பிரதேச சபையின் வீதி மீட்புப் பணியை முடக்கும் நோக்குடன், அதற்கு எதிராகத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரிப் பலாலி  காவல்துறையினா் ல்லாகம் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஒருதலைப்பட்சமாகத் தடையுத்தரவு வழங்க முடியாது எனக் குறிப்பிட்ட மன்று, கடந்த மே 11-ஆம் திகதி தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளரை அழைத்திருந்தது. அன்றைய தினம் அவர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பிரதேச சபையின் சட்டபூர்வ அதிகாரங்களை முன்வைத்து வலுவான வாதங்களை ஆவணப்படுத்தினார். இருதரப்பு நியாயங்களையும் ஆராய்ந்து இன்றைய தினம் (மே 21) தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. எனினும், மேலதிக பரிசீலனைகளுக்காக இக்கட்டளை வரும் ஜூன் 25-ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியின் குறுக்கே உள்ள வேலி அகற்றப்படும் பட்சத்தில், தையிட்டி விகாரைக்காகத் தற்போது அடாத்தாகக் கையகப்படுத்தப்பட்டு மூடப்பட்டுள்ள சில தனியார் காணிகளும் இயல்பாகவே விடுவிக்கப்படக்கூடிய ஏதுநிலை உருவாகும். இதனால், பல வருடங்களாகத் தமது பூர்வீக நிலங்களை இழந்து தவிக்கும் காணி உரிமையாளர்கள் மத்தியில் அடுத்த மாதம் கிடைக்கவுள்ள இந்தத் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

#ThayiityViharaCase #MallakamCourt #ValiNorthPradeshiyaSabha #LandRightsTamil  #VerdictPostponed

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More