Home இலங்கைதையிட்டி விகாரை – காவற்துறையினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்!

தையிட்டி விகாரை – காவற்துறையினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்!

by admin
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உத்தியோகபூர்வ வரம்புக்குள் உட்செல்லும் வீதி விவகாரம் மற்றும் தையிட்டி விகாரை விவகாரங்களில், காவற்துறையினர் சட்டவிரோதமாகத் தலையீடு செய்வதாகக் கூறி, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏகமனதான தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது, பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி ஒன்றை தையிட்டி விகாராதிபதி சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அந்த வீதியை விடுவிப்பதற்காக சட்டபூர்வமாக முயற்சித்த பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளருக்கு எதிராக, பலாலி காவற்துறையினர் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு, விடயத்துடன் எவ்விதத் தொடர்புமற்ற தெல்லிப்பழை காவல் நிலையப் பொறுப்பதிகாரியும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.
உள்ளூர் அரச நிர்வாகக் கட்டமைப்பான பிரதேச சபையின் சட்டபூர்வமான பணிகளுக்குக் காவற்துறையினர் விடுக்கும் அச்சுறுத்தலாகவே இது அமைந்திருப்பதாக உறுப்பினர்கள் கவலை வெளியிட்டனர். முன்னதாக, தையிட்டி விகாரை சட்டவிரோதமானது என்ற அறிவித்தல் பலகையை நாட்டுவதற்கு பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும், அதற்குப் பலாலி காவற்துறையினர் அச்சுறுத்தும் வகையில் தடையேற்படுத்தியிருந்தனர். தற்போது பொது வீதியை மீட்கும் முயற்சிக்கும் தடையேற்படுத்தி நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவற்துறையினரே, உள்ளூராட்சி மன்றம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து வருவதாகச் சபையில் கடுமையான விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பலாலி காவற்துறையினரின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வெறும் தீர்மானங்களுடன் நின்றுவிடாமல், உடனடியாகச் சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து நீதிமன்றில் காவற்துறையினருக்கு எதிராக வழக்குத் தொடர தவிசாளர் விரைந்து செயல்பட வேண்டும் என்றும், இந்த ஜனநாயகப் போராட்டத்தில் தமிழ் சட்டத்தரணிகள் அனைவரும் எவ்விதப் பேதமுமின்றி ஓரணியில் திரண்டு ஆதரவளிக்க வேண்டும் என்றும் சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More