Home இலங்கைவடக்கில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன!

வடக்கில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன!

 புரிதலின்றி போராட்டங்களை முன்னெடுப்பதாக டில்வின் சில்வா தெரிவிப்பு!

by admin
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை அண்மையில் திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, வடக்கில் காவற்துறையினரினதும் இராணுவத்தினரினதும் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் சிலவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட சர்வதேசத் தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான இலங்கையின் இந்த உள்நாட்டு விவகாரத்தில், ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியின்படி மக்களின் நிலங்களை மக்களுக்கே திரும்ப ஒப்படைப்பதற்கான செயல்பாடுகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், வடக்கு மாகாணத்தில் பல இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, கணிசமான அளவு நிலங்கள் விடுவிக்கப்பட்டு உள்ளதுடன், மூடப்பட்டிருந்த வீதிகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது மேலும் சில காணிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதுடன், இராணுவ முகாம்களின் தேவைகளைக் குறைத்து அந்த நிலங்களையும் விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்படும் நிலங்களை சாதாரணமாகப் பகிர்ந்தளிக்காமல், வடபகுதி மக்கள் சுயதொழில் அல்லது வணிகங்களைத் தொடங்கி தங்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். காணி விடுவிப்பு மாத்திரமின்றி, விடுவிக்கப்படும் காணிகளில் புதிய வீடுகள் அமைத்தல், கிராமப்புற வீதிப் புனரமைப்பு போன்ற பணிகளுக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் (Budget) பல மில்லியன் டொலர் பெறுமதியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க, சிலர் அவசரப்பட்டு அல்லது போதிய புரிதல் இல்லாமல் போராட்டங்களை உருவாக்கி வருகின்றனர் என்றும், அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்க, தோல்வியடைந்த அரசியல் சக்திகள் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டாலும் அரசாங்கம் தனது உறுதிமொழிகளை முறையாக நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More