156
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாகச் செல்லும் வீதியின் போக்குவரத்து நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கு இராணுவத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான பகுதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாகச் செல்கின்றது.
கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இந்த வீதிப் பகுதி, கடந்த ஆண்டு சில கடுமையான நிபந்தனைகளுடன் பொதுமக்களின் போக்குவரத்திற்காக இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் காணி விடுவிப்புத் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது. இதன்போது, குறித்த வீதியினைப் பொதுமக்கள் 24 மணி நேரமும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் முன்வைத்திருந்தார். பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு இராணுவத்தினர் ஆரம்பத்தில் இதற்கு மறுப்புத் தெரிவித்த போதிலும், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட அழுத்தமான கோரிக்கைகளை அடுத்து போக்குவரத்து நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கு உடன்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், இதுவரை காலமும் காலை 06:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை மாத்திரமே திறக்கப்பட்டிருந்த பலாலி வீதி, தற்போது இரவு 08:00 மணி வரை திறக்கப்படவுள்ளது. இந்த நேர நீடிப்பு அப்பகுதி பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் கணிசமான பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love

