51
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 21ஆம் நாள் அகழ்வுப் பணிகள் யாழ் நீதவான் முன்னிலையில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய தின அகழ்வாராய்ச்சியின் போது மேலும் 12 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த எச்சங்களில் இருந்து 4 சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளும், 2 சிசுக்களின் எலும்புக்கூடுகளும் உள்ளடங்கலாக 7 மனித எலும்புக்கூடுகள் இன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மனிதாபிமானமற்ற முறையில் புதைக்கப்பட்டுள்ள இந்த எச்சங்களுடன் சிசுக்களின் பால் போத்தல்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்ற சான்றுகளும் மீட்கப்பட்டு வருவது பார்ப்போரை உலுக்கியுள்ளது.
இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 339 ஆக உயர்வடைந்துள்ளதுடன், அவற்றில் 318 எலும்புக்கூடுகள் தற்பொழுது முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கையின் உள்நாட்டு யுத்தக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இத்தகைய கொடூரங்கள் மற்றும் வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டோர் குறித்த உண்மைகளைக் கண்டறியவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் சர்வதேசக் கண்காணிப்புடன் கூடிய வெளிப்படையான விசாரணைகள் அவசியம் என மனித உரிமை அமைப்புகளும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
Spread the love

