Home இலங்கைமன்னாரில் PTA-க்கு எதிராகவும் கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும் பாரிய போராட்டம்!

மன்னாரில் PTA-க்கு எதிராகவும் கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும் பாரிய போராட்டம்!

by admin
மன்னாரில், பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) தொடர்பான எதிர்ப்பையும், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதனின் விடுதலையையும் கோரி இன்று (11) வியாழக்கிழமை காலை சுமார் 10.00 மணியளவில் அமைதியான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் மன்னார் அரசுப் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பல்வேறு பொது அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம், பெண்கள் அமைப்புகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதாகவும், அதன் தொடர்ச்சியாக சொல்லிசைப் பாடகர் சங்கீதனும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு, பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
மேலும், PTA சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அமைதியான முறையில் பதாகைகளை ஏந்தியபடி நடைபெற்ற போராட்டத்தின் போது, ஒரு பதாகையில் இடம்பெற்றிருந்த வாசகம் தொடர்பாக மன்னார் பொலிஸார் சிறிது நேரம் விசாரணை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் குறித்த வாசகத்தின் பொருள் விளக்கப்பட்டதையடுத்து பொலிஸார் அங்கிருந்து சென்றதாகவும், தொடர்ந்து போராட்டம் அமைதியான முறையில் நிறைவடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More