60
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய ஏ. ஜி. அலெக்ஸ்ராஜா அவர்கள், நியமிக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் மிகவும் சந்தேகத்திற்குரிய முறையில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் காரசாரமான கேள்வியை எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 27(2) பிரிவின் கீழ், நீதியமைச்சரை நோக்கி இக்கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற ஏ. ஜி. அலெக்ஸ்ராஜா, மே 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதுளை மேல் நீதிமன்றத்திற்கு அவசரமாக மாற்றப்பட்டமை நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்த பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் இடமாற்றத்தின் பின்னணியில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக, வட மாகாண ஆளுநர் அவர்கள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு (JSC) கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்ததாகக் கூறி, சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்குத் தங்களின் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து கடிதம் எழுதியிருந்தது. வட மாகாண ஆளுநருக்கு எதிராக நீதிபதி அலெக்ஸ்ராஜா அவர்களால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிரான அவரது கடுமையான தீர்ப்புகளே இந்த பழிவாங்கும் இடமாற்றத்திற்குக் காரணம் எனப் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சட்டத்தின் ஆட்சியையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் நோக்கில், இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வரவும், நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடுகளைத் தடுத்து நிறுத்தவும் நாடாளுமன்றத்தில் நீதியமைச்சரிடம் இன்று அவசர விளக்கம் கோரப்பட்டுள்ளது. பொதுவாக 3 முதல் 4 ஆண்டுகள் வரை நீடிக்க வேண்டிய ஒரு பதவிக்காலம், ஒரே மாதத்தில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என இக்கேள்வியின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Spread the love

