47
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் 135-வது பட்டமளிப்பு விழா நேற்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை அவர்கள் இவ்விழாவில் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டு, சிறப்புரையாற்றத் தொடங்கினார். ஆனால், அவர் மேடைக்கு வந்த சில நிமிடங்களிலேயே அரங்கில் இருந்த 100 முதல் 200 வரையிலான பட்டதாரி மாணவர்கள் திடீரென தங்களது இருக்கைகளை விட்டு எழுந்து, கூச்சலிட்டவாறு வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிநடப்பு செய்த மாணவர்கள் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியும், ‘பாலஸ்தீன விடுதலை’ முழக்கங்களை எழுப்பியும் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இணைந்து இஸ்ரேல் அரசு மற்றும் அந்நாட்டு இராணுவத்திற்கு சுமார் 1.2 பில்லியன் டொலர் மதிப்பில் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை வழங்குவதற்காக ‘புராஜெக்ட் நிம்பஸ்’ (Project Nimbus) என்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்தத் தொழில்நுட்பங்கள் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதாக ‘No Tech for Apartheid’ மற்றும் ‘Students for Justice in Palestine’ போன்ற மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டி, இந்தத் திடீர் போராட்டத்தை நடத்தின.
மாணவர்களின் இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சலனமின்றித் தனது உரையைத் தொடர்ந்த சுந்தர் பிச்சை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைப்பது, கடினமான சவால்களை எதிர்கொள்வது மற்றும் தங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுப்பது குறித்து மீதமிருந்த மாணவர்களிடம் அறிவுரைகளை வழங்கினார்.
பொதுவாகத் தொழில்நுட்ப மாநாடுகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உரையாற்றும்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் குறித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் சுந்தர் பிச்சை, இந்த உரையில் ‘AI’ என்ற வார்த்தையையே முழுமையாகத் தவிர்த்தார். நடப்பு ஆண்டில் பிற பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்திய தொழில்நுட்பத் தலைவர்கள் AI தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு இழப்பு குறித்துப் பேசியபோது மாணவர்களால் கேலி செய்யப்பட்ட பின்னணியிலேயே, அவர் இத்தலைப்பைத் தவிர்த்ததாகக் கருதப்படுகிறது. இந்த வெளிநடப்பு தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Spread the love

